விளையாட்டு

T20 WC: வீழ்ந்தது ஆஃப்கன்.. அரையிறுதிக்குக் கூட செல்லாமல் வெளியேறியது இந்தியா!

இதே மாதிரியான குறைந்த ஸ்கோரை சேஸ் செய்வதில் உள்ள கடினங்களை சமாளிப்பதில் வில்லியம்சன் கில்லாடி. 42 பந்துகளில் 40 ரன்களை எடுத்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

T20 WC: வீழ்ந்தது ஆஃப்கன்.. அரையிறுதிக்குக் கூட செல்லாமல் வெளியேறியது இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை நிர்ணயிக்கும் நியுசிலாந்து Vs ஆஃப்கானிஸ்தான் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வென்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிப்பெறும் என்ற சூழலில் நியுசிலாந்து இந்த போட்டியை வென்றிருக்கிறது. இதன் மூலம், இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை இழந்திருக்கிறது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபியே டாஸை வென்றிருந்தார். ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். இது ஆஃப்கானிஸ்தானின் வழக்கமான பாணியே. முதலில் பேட் செய்து சராசரியாக ஒரு ஸ்கோரை எடுத்துவிட்டு தங்களது பந்துவீச்சு பலம் மூலம் அதை டிஃபண்ட் செய்ய நினைப்பர். ஆனால், இன்றைக்கு அவர்களால் சராசரியை விடவும் குறைவான ரன்களையே எடுக்க முடிந்தது. இதனால் பந்துவீச்சிலும் அவர்களால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை.

பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களிலேயே 23 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். இதன்பிறகு, நஜிபுல்லா மட்டுமே கொஞ்சம் நின்று ஆஃப்கானிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டார். ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொண்டார். இவருக்கு உதவியாக குல்பதினும் முகம்மது நபியும் சிறிதாக பார்ட்னர்ஷிப் போட்டனர். 48 பந்துகளில் 73 ரன்களை அடித்திருந்த நஜிபுல்லா ட்ரெண்ட் போல்டின் பந்துவீச்சில் நீஷமிடம் கேட்ச் ஆனார்.

இதன்பிறகு, ஆஃப்கானிஸ்தான் அணியால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. நீஷம் வீசிய கடைசி ஓவரில் ரஷீத்கானால் 2 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. நியுசிலாந்து அணியில் போல்ட் 3 விக்கெட்டுகளையும் சவுத்தி 2 விக்கெட்டுகளையும் மில்னே, நீஷம், சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். நியுசிலாந்தின் பந்துவீச்சு மட்டுமில்லை. ஃபீல்டிங்கும் அற்புதமாக இருந்தது. பவுண்டரி லைனில் மிட்செல் தடுத்த ஒரு சிக்சரே இதற்கு சாட்சி.

T20 WC: வீழ்ந்தது ஆஃப்கன்.. அரையிறுதிக்குக் கூட செல்லாமல் வெளியேறியது இந்தியா!

நியுசிலாந்து அணிக்கு டார்கெட் 125. முஜிபுர் ரஹ்மான், ரஷீத்கான் இவர்கள் இருவரும் மட்டுமே ஆஃப்கானிஸ்தான் அணியின் பெரிய நம்பிக்கைகள். இவர்கள் இருவரும் கட்டுக்கோப்பாக வீசினால் நியுசிலாந்து அணிக்கு ஆஃப்கன் கொஞ்சம் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இவர்களாலும் பெர்ஃபார்ம் செய்ய முடியவில்லை. ஓப்பனரான மிட்செல்லின் விக்கெட்டான முஜிப்பும் கப்திலின் விக்கெட்டை ரஷீத்கானும் வீழ்த்தினர்.

இவற்றை தாண்டி இருவராலும் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. கேப்டன் வில்லியம்சனும் கான்வேவும் நிலைத்து நின்று சேஸிங்கை முன்னெடுத்தனர். இதே மாதிரியான குறைந்த ஸ்கோரை சேஸ் செய்வதில் உள்ள கடினங்களை சமாளிப்பதில் வில்லியம்சன் கில்லாடி. 42 பந்துகளில் 40 ரன்களை எடுத்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். கான்வேவும் 36 ரன்களை எடுத்து சிறப்பாக ஆடியிருந்தார்.

நியுசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், நியுசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது. ஆஃப்கானிஸ்தான் அணியோடு சேர்த்து இந்திய அணியும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்திய அணி நமீபியாவை நாளை எதிர்கொள்ளவிருக்கிறது. இது சம்பிரதாயத்திற்கு நடைபெறும் போட்டியாகவே இருக்கப்போகிறது. கேப்டனாக விராட் கோலியின் கடைசி போட்டியாகவும் இது இருக்கும்.

மிக மோசமான பெர்ஃபார்மென்ஸை கொடுத்துவிட்டு அடுத்த அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பார்த்து நிற்கும் பரிதாப நிலையோடு இந்த தொடரை இந்தியா முடித்திருக்கிறது. தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories