விளையாட்டு

IPL 2021 :கொல்கத்தா அணி ஃபைனல் போக Number Secrets காரணமா? மோர்கன் நம்பும் அந்த லேமன் யார்? CSK vs KKR

கொல்கத்தா அணி எப்படி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது?? ப்ராட் பிட்டின் 'MoneyBall' ம் பிரண்டன் மெக்கல்லமின் கொல்கத்தாவும்!

IPL 2021 :கொல்கத்தா அணி ஃபைனல் போக Number Secrets காரணமா? மோர்கன் நம்பும் அந்த லேமன் யார்? CSK vs KKR
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

கொல்கத்தா அணி இந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. ஆச்சர்யமான விஷயம்! முதல் பாதியில் 7 போட்டிகளில் 2 இல் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலின் அடிவாரத்தில் இருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் 7 இல் 5 போட்டிகளை வென்று ப்ளே ஆஃப்ஸுக்கு வந்தது. அங்கே எலிமினேட்டர், குவாலிஃபையர் என இரண்டு போட்டிகளிலும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. வெறித்தனமாக ஆடி வரும் கொல்கத்தா சென்னையை வீழ்த்திவிடுமோ என்கிற பதற்றமும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

கட்..

அப்படியே 2011க்கு செல்வோம். ப்ராட் பிட்டின் நடிப்பில் 'MoneyBall' எனும் படம் வெளியாகிறது. பேஸ்பாலை மையப்படுத்திய படம். அமெரிக்காவின் மேஜர் லீகில் ஆக்லாந்து பேஸ்பால் அணி தொடர் தோல்விகளை சந்திக்கிறது. அணியை மறுகட்டமைப்பு செய்ய பொருளாதார ரீதியில் அதிக முதலீடை செய்ய அணியின் உரிமையாளர்கள் முன் வர மறுக்கிறார்கள். அணியின் முக்கியமான வீரர்கள் வெளியேறுகிறார்கள். இக்கட்டான சூழலில் தவித்து நிற்கிறது ஆக்லாந்து அணி. அந்த அணியின் ஜெனரல் மேனேஜராக ப்ராட் பிட். செலவழிக்க பணமும் இல்லை.... ஸ்டார் ப்ளேயர்களும் வெளியேறுகிறார்கள்.... எதிர்காலம் என்னவென்றே தெரியாத நிலையில் ப்ராட் பிட் மட்டும் அணியை எப்படியாவது வெற்றிப்பாதைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறார்.

அணி உரிமையாளர், வீரர்கள் என யார் மீதும் நம்பிக்கை வைத்து களமிறங்க முடியாத சூழலில் ப்ராட் பிட் எண்களின் மீது நம்பிக்கை வைக்கிறார். பீட்டர் ப்ராண்ட் எனும் statistics இல் பட்டையை கிளப்பும் இளைஞரை தனக்கு அசிஸ்ட்டண்ட்டாக கொண்டு வருகிறார். இனிதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது. வெறுமென எண்களையும், புள்ளி விவரங்களையும், பழைய ரெக்கார்டுகளையும் மட்டுமே அடிப்படையாக கொண்டு வீரர்களை தேர்வு செய்து அணியை கட்டமைக்கிறார். இப்போது ஆக்லாந்து பேஸ்பால் அணி களமிறங்குகிறது. ஸ்டார் வீரர்கள் இல்லை.... stats களை மட்டுமே நம்பி களமிறங்குகிறது. அந்த அணியின் மீது பயங்கர விமர்சனங்கள். பேஸ்பாலை பற்றிய அடிப்படையே தெரியாத ஆளை அசிஸ்டண்ட் மேனேஜராக கொண்டு வந்து ப்ராட் அணியை இன்னும் அதளபாதாளத்தில் தள்ளுகிறார் என கடும் விமர்சனங்கள் எழுகிறது. ஆனால், களத்தில் மேஜிக் நடந்தது.

ஆக்லாந்து அணி தொடர்ச்சியாக 20 போட்டிகளை வென்று நூற்றாண்டு சாதனையை படைக்கிறது. Stats ஐ மட்டுமே நம்பி களமிறங்கிய ஆக்லாந்து அணி பொருளாதார ரீதியாக எட்டவே முடியாத தூரத்தில் இருந்த பல அணிகளையும் ஓடவிட்டது.

இது திரைப்படத்துக்காக எழுதப்பட்ட கதை அல்ல. உண்மைக் கதை. 2002 இல் அமெரிக்காவின் மேஜர் லீகில் ஆக்லாந்து அணி இப்படியான ஒரு சம்பவத்தை செய்திருந்தது. அந்த அணியின் ஜெனரல் மேனேஜரான பில்லி பினீன் கதாப்பாத்திரத்தையை ப்ராட் பிட் ஏற்று நடித்திருப்பார். ஆக்லாந்து அணியின் அந்த வெற்றி பேஸ்பாலை தாண்டி ஒட்டுமொத்த விளையாட்டுலகிலுமே 'Performance Analyst' களின் தேவையை உணர்த்தியது.

கட்..

இப்போது அப்படியே கொல்கத்தா பக்கமாக வருவோம். கடந்த சீசனின் பாதியில் கொல்கத்தா அணிக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனான மோர்கன் கேப்டனாக்கப்பட்டிருந்தார். அந்த சீசனில் அவர் பெரிதாக ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை.

ஆனால், இந்த 2021 சீசன் தொடங்குவதற்கு முன்பாக ஒரு முக்கியமான முடிவை மோர்கன் எடுத்தார். அதாவது, இங்கிலாந்து அணியின் Performance analyst ஆன நேதன் லேமனை கொல்கத்தா அணியின் அனலிஸ்ட்டாக அழைத்து வந்தார். நேதன் லேமன் 2009 லிருந்தே இங்கிலாந்து அணியோடு பயணிப்பவர். அந்த அணியின் வீழ்ச்சி மற்றும் உச்சபட்ச எழுச்சி இரண்டிலுமே இவரின் பங்கு அதிகமாக இருந்தது. கேப்டன்களும் வீரர்களும் இவர் நோட் போட்டு கொடுக்கும் புள்ளி விவரங்களுக்கும் மேட்ச் அப்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆட்டத்தில் அப்ளை செய்வர்.

இவர் பிப்ரவரியில் அணிக்குள் வந்த பிறகுதான் வெங்கடேஷ் ஐயர் மாதிரியான வீரர்களை ஏலத்தில் எடுத்து போட்டனர். வெங்கடேஷ் ஐயர் ஜனவரியில் நடந்திருந்த சையது முஷ்டக் அலி ட்ராபியில் மத்திய பிரதேச அணிக்காக சிறப்பாக ஆடியிருந்தார். கொல்கத்தா அணி இந்த சீசனில் எடுக்கும் பல முடிவுகள் விசித்திரமானதாக இருப்பதை பார்த்திருப்போம். பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரையே நிதிஷ் ராணாவிடம் மோர்கன் கொடுத்திருப்பார்.

டிவியில் பார்த்த பலருக்கும் இது முட்டாள்தனமான முடிவாகவே தெரிந்திருக்கும். ஆனால், கொல்கத்தா இதை திட்டமிட்டே செய்தது. இந்த சீசனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்ட்ரைக் வைத்திருக்கிற பேட்ஸ்மேன்களில் ஒருவராக கோலியும் இருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 100 ஐ சுற்றிதான் இருந்தது. இன்னொரு எண்ட்டில் இடக்கை பேட்ஸ்மேனாக படிக்கல் இருக்கிறார். இடக்கை ஸ்பின்னருக்கு எப்போதும் சரியான மேட்ச் அப் ஒரு ஆஃப் ஸ்பின்னர்தான். கோலிக்கு எதிரான நம்பர்களும் இந்த மேட்ச் அப்பும்தான் நிதிஷ் ராணாவிடம் பந்தை கொடுக்க வைத்தது. ஆஃப் ஸ்பின்னரான நிதிஷ் ராணாவை கொண்டு வருவதின் மூலம் இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் செக் வைக்க முடியும் என நம்பினர். கொண்டு வந்தனர்.

அந்த ஓவரில் விக்கெட் இல்லாவிடிலும் கோலி, படிக்கல் இருவரும் நிதிஷ் ராணா பார்ட் டைமர்தானே என ஒரு பவுண்டரிக்கு கூட முயற்சிக்கவில்லை. ரொம்பவே தற்காப்பாகத்தான் அந்த ஓவரை ஆடி முடித்திருப்பர்.

MoneyBall
MoneyBall

சென்னைக்கு எதிரான போட்டியில் வருணையும் சுனில் நரைனையும் கடைசி 3 ஓவர்களில் மோர்கன் வீச வைத்திருப்பார். காரணம் ரொம்பவே எளிமையானது. கடந்த 3 வருடங்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருக்கும் வீரர் தோனியே. வருணுக்கும் நரைனுக்கும் எதிராக ரொம்பவே திணறுவார். மேலும், ஜடேஜாவும் வேகப்பந்து வீச்சாளர்களை விட ஸ்பின்னர்களுக்குத்தான் அதிகம் திணறுவார். அந்த எண்கள்தான் டெத் ஓவரில் துணிந்து இரண்டு ஸ்பின்னர்களை மோர்கன் பயன்படுத்த காரணமாக இருந்தது.

(பண்ட் கூடத்தான் அஷ்வினுக்கு கடைசி ஓவரை கொடுத்தார் என கேள்வி எழும். அது வேறு வழியின்றி கொடுத்தாரே ஒழிய அதில் எந்த திட்டமிடலும் இருந்திருக்கவில்லை)

இதுதான் கொல்கத்தாவின் ஐடியா. முதல் பாதியில் மொத்தமாக தோற்றுவிட்டார்கள். ஆட்டத்திலேயே இல்லை. இரண்டாவது பாதிக்கு வருகிறார்கள். யார் மீது நம்பிக்கை வைக்க முடியும்? பிகில் படத்தில் விஜய் ட்ரஸ்ஸிங் ரூமூக்குள் சென்று ஆவேசமாக பேசுவதை போல, மெக்கல்லம் பேச முடியுமா? அப்படி பேசினால் வெகுண்டெழுந்து அத்தனை பேரும் பெர்ஃபார்ம் செய்து கோப்பையை வெல்ல இது ஒன்றும் திரைப்படம் இல்லையே. யார் மீதும் எதன் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத சூழலில் எண்களின் மீதும் அனலிஸ்ட்கள் கொடுக்கும் inputகளின் மீதும் அதிக நம்பிக்கை வைக்க தொடங்கினர்.

அதனால்தான் கொல்கத்தாவின் பல மூவ்களும் வினோதமாக தெரிய தொடங்கியது. மேலே குறிப்பிட்ட அந்த போட்டியில் நிதிஷ் ராணா முதல் ஓவரை வீசியிருப்பார். ஆனால், அதன்பிறகு அந்த இன்னிங்ஸில் ஒரு ஓவரை கூட வீசியிருக்க மாட்டார். வருண் சக்கரவர்த்தியை மோர்கன் பவர் ப்ளேயில் மூன்றாவது ஓவர் வீச அழைப்பார். வருணும் வந்து சிறப்பாக வீசி விக்கெட்டையும் எடுத்து கொடுப்பார். ஆனால், அடுத்த ஓவரை தொடர்ந்து அவரை வீச வைக்கமாட்டார். அதன் பின்னணியில் நேதன் லேமனின் எதாவது ஒரு கணக்கு அடங்கியிருக்கும். தங்களுக்கான ரிசல்ட் கிடைக்கும் வரை சீட்டுக்கட்டை களைத்து போடுவதை போல வீரர்களை களைத்து போட்டு பல permutation combination களை முயற்சி செய்து பார்ப்பார்கள்.

எண்களின் அடிப்படையில் ரெக்கார்ட்களின் அடிப்படையில் வீரர்களை கையாளுவதால் இங்கே எந்த எமோஷனுக்கும் வேலையில்லை. ஒரு வீரர் அணிக்கு பயன்படுவாராயின் அவரை வைத்திருப்பார்கள். இல்லையேல், எண்களை தூக்கி முகத்தின் நேராக காண்பித்து வெளியேற்றி விடுவார்கள். பிரஷித் கிருஷ்ணாவை இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையாக பல வீரர்களும் புகழ்ந்திருந்தார்கள். ஆனால், சென்னைக்கு எதிராக அவர் ஜடேஜாவிடம் ஒரே ஓவரில் 22 ரன்கள் அடி வாங்கிய பிறகு, அடுத்த போட்டியிலிருந்தே அவர் ஓரங்கட்டப்பட்டுவிட்டார். ஒவ்வொரு போட்டியையும் வென்றாக வேண்டிய சூழலில் பிரஷித் கிருஷ்ணாவின் அந்த ஒரு ஓவரால் ஒரு போட்டியையே கொல்கத்தா இழந்தது. அணிக்கு தேவையான ரிசல்ட்டை கொடுக்காத வீரர் அணிக்கு எதற்கு? எண்கள் அவருக்கு சாதகமாக இல்லை. இந்த விஷயமுமே Money Ball படத்தில் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கும். ஒரு வீரர் நமக்கு தேவையில்லை என்றால் அவரிடம் நேருக்கு நேர் சென்று ஒரே வரியில் சொல்லி முடித்துவிடுங்கள். அவர்கள் professional ஆக எடுத்துக் கொள்வார்கள். அதைவிட்டுவிட்டு தேவையில்லாத வீரரை அணியில் வைத்து மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் திணறினால் நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை ஒரு போதும் அடைய முடியாது என சில காட்சிகளில் விவரித்திருப்பார்கள்.

Permutation combination பிரஷித் கிருஷ்ணாவுக்கு பதில் அடுத்த போட்டியிலேயே சந்தீப் வாரியரை முயன்றிருப்பார்கள். அடுத்து சிவம் மவி. மவி கொஞ்சம் சரியாக செட் ஆவார் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. பஞ்சாபுக்கு எதிராக சிவம் மவி ஆடிய அந்த போட்டியில் சவுதியை விடவும் வெங்கடேஷ் ஐயரை விடவும் மவி குறைந்த எக்கானமியில் வீசியிருப்பார். அதனால் அடுத்தடுத்த போட்டிகளில் மவியை வைத்தே களமாடியிருப்பார்கள்.

ரஸலுக்கு காயம் ஏற்பட்ட போது டிம் சீபெர்ட் நியுசிலாந்து வீரரை ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டு வந்தார்கள் இவர் ப்யூர் பேட்ஸ்மேன். இவர் மூலம் கொல்கத்தாவின் மிடில் ஆர்டர் பிரச்சனை தீரும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், இது பொருந்தாத தேர்வாக அமைந்தது. சீபெர்ட் ஓப்பனிங் பேட்ஸ்மேன். மேலும், கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையில் கடைசியில் இருந்ததால் இவருக்கான ஓவரும் கிடைக்கவில்லை. உடனே அடுத்த போட்டியிலேயே சீபெர்ட்டை தூக்கி பென்ச்சில் வைத்துவிட்டு ஷகிப்பை எடுத்திருப்பார்கள். சீபெர்ட் சிறப்பான வீரரே அவருக்கு இன்னொரு வாய்ப்பை கொடுப்போம். பேட்டிங் ஆர்டரில் மேலே இறக்குவோம் என்ற யோசனையெல்லாம் நெவர்! ஒரு தவறு நடந்துவிட்டது. அதை திருத்த நினைக்கும் போது எமோஷனுக்கெல்லாம் வேலையே இருக்கக்கூடாது. அந்த தீர்க்கமான முடிவால் இப்பொது ஷகிப்-அல்-ஹசன் உள்ளே வருகிறார். சிறப்பாக பந்து வீசி தேவையான ரிசல்ட்டை கொடுக்கிறார்.

சில சமயங்களில் கொல்கத்தா அணி ஆடும் போது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பெவிலியனில் இருந்து கோட் நம்பர்கள் பகிரப்படுவதை பார்த்திருப்பீர்கள். பழைய புள்ளி விவரங்களை தாண்டி நேரடியாக அந்த நொடியில் ஆட்டத்தில் நடக்கும் மாற்றங்களை வைத்து புது வியூகங்களை வகுத்து அதை களத்தில் நிற்கும் மோர்கனுக்கு விளக்கவே இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வளவு வேலை செய்கிறார்கள் சரிதான். ஆனால், முதல் பாதியிலும் கேப்டன் மோர்கனும் - அனலிஸ்ட் நேதன் லேமன் கூட்டணியும்தானே வியூகங்களை வகுத்தது? அப்போது ஏன் தோற்றார்கள்?

எண்களையும் புள்ளி விவரங்களையும் மேட்ச் அப்களையும் பிரதானமாக நம்பி களமிறங்கும் போது தொடக்கத்தில் தோல்விகள் ஏற்படுவது இயல்பாகவே இருக்கிறது. அந்த 'MoneyBall' படத்தில் சொல்லப்பட்ட நிஜ சம்பவத்தில் கூட அப்படித்தான் நடந்திருக்கும். ஆக்லாந்து பேஸ்பால் அணி தொடர்ச்சியாக 20 போட்டிகளை வெல்வதற்கு முன் பல போட்டிகளில் தொடர்ந்து தோற்கும். அப்போது ஜெனரல் மேனேஜரான பில்லி பீனின் (ப்ராட் பிட்) மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஆரம்பக்கட்ட தோல்விகளுக்கு பிறகு நிலைமை மாற தொடங்கும். தொடர்ச்சியாக 20 போட்டிகளில் வெற்றி. வரலாற்று சாதனை!

IPL 2021 :கொல்கத்தா அணி ஃபைனல் போக Number Secrets காரணமா? மோர்கன் நம்பும் அந்த லேமன் யார்? CSK vs KKR

இதே அனலிஸ்ட்டான நேதன் லேமன் விஷயத்திலும் இதை பொருத்தி பார்க்கலாம். 2020 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீகில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக அனலிஸ்ட்டாக நேதன் லேமன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஆண்டு பிப்ரவரி மார்ச்சில் PSL போட்டிகள் நடைபெற்றது. கொரோனா காரணமாக தடைப்பட்டு மீண்டும் ஜுனில் தொடங்கப்பட்டது. இந்த ஐ.பி.எல் போன்றே இரண்டு பாதிகளாக நடைபெற்றிருந்தது. முதல் பாதியில் முல்தான் சுல்தான் அணி 5 போட்டியில் ஒன்றில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. சிறு இடைவெளிக்கு பிறகு இரண்டாம் பாதி தொடங்கப்பட்ட போது மீதமிருந்த 5 போட்டிகளில் 4 இல் வென்று ப்ளே ஆஃப்ஸிற்கு தகுதிப்பெற்று இறுதிப்போட்டிக்கு வந்து கோப்பையையும் வென்றது. இந்த சீசனில் கொல்கத்தாவின் கதையும் அதுதானே! முதல் பாதியில் சொதப்பல். இரண்டாம் பாதியில் விஸ்வரூபம். இப்போது இறுதிப்போட்டி!

தி இந்துவில் வெளியாகும் Soduku வை போன்றதுதான் இவர்களின் முறை. புதிரான எண்களையோ வார்த்தைகளையோ க்ளியர் செய்யும் வரை நாம் பலவற்றை முயற்சிப்போம் இல்லையா? அதே போன்றுதான் நாம் முதலில் முயற்சிக்கும் போது தோல்வியும் ஏமாற்றமும்தான் ஏற்படும். எண்களையும் வார்த்தைகளையும் மாற்றி மாற்றி போட்டு விளையாடும் போது ஒரு கட்டத்தில் நமக்கான விடை கிடைக்கும். அதுதான், ஆக்லாந்துக்கு நடந்தது. இங்கிலாந்துக்கு நடந்தது. முல்தான் சுல்தானுக்கு நடந்தது. இப்போது கொல்கத்தாவுக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி அனலிஸ்ட்கள் மீது அதிக நம்பிக்கை வைப்பதை பலரும் விரும்புவதில்லை. ஒரு அனலிஸ்ட்டின் கைப்பாவையாக கேப்டன் இருக்கக்கூடாது என விமர்சனமும் எழுவதுண்டு. கவுதம் கம்பீர்ரெல்லாம் இப்படி என்னிடமெல்லாம் கோட் வேர்டை பயன்படுத்த முயன்றால் கேப்டன் பதவியையே தூக்கி எறிந்துவிடுவேன் என பேசியிருந்தார்.

ஆனால், மோர்கன் இதையெல்லாம் கண்டுக்கொள்வதில்லை. அவர் நேதன் லேமனோடு நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். 2019 இல் உலகக்கோப்பையை வென்றதில் அனலிஸ்டகளின் பங்கு அதிகம் என்பதை உணர்ந்தவர். அதனால் மற்ற கேப்டன்களை விட அனலிஸ்ட்களுக்கு அதிகம் மதிப்பளிக்கக் கூடியவராக மோர்கன் இருக்கிறார். அதற்கான பயனையும் அறுவடை செய்கிறார்.

'Hitting against the spin' என அனலிஸ்ட் நேதன் லேமனும் பென் ஜோன்ஸ் என்பவரும் இணைந்து ஒரு புத்தகத்தை எழுதியிருப்பார்கள். முழுக்க முழுக்க எண்களும் புள்ளி விவரங்களும் மேட்ச் அப்களும் போட்டியை வெல்ல எப்படி பயன்படுகின்றன என்பதை பற்றிய புத்தகம். அந்த புத்தகத்திற்கான முன்னுரையை கூட மோர்கன் தான் எழுதியிருப்பார். அதிலும் 'MoneyBall' ஐ பற்றி குறிப்பிட்டிருப்பார். வாய்ப்பிருப்பவர்கள் வாங்கி படித்து பாருங்கள். நல்ல புத்தகம்!

எண்களோடு சேர்த்து 'இறங்கி அடி பார்த்துக்கலாம்' என வீரர்களுக்கு மெக்கல்லம் கொடுக்கும் ஊக்கமும் சுதந்திரமும் கூட அவர்களின் வெற்றிக்கு ஒரு மிக முக்கிய காரணம்.

ஆக்லாந்து பேஸ்பால் அணியின் ஜெனரல் மேனஜரான பில்லி பீனின் (ப்ராட் பிட்) இடத்தில் மெக்கல்லமையும் அவர்களுக்கு புள்ளி விவரங்கள் மூலம் உதவும் asst GM ஆன பீட்டர் ப்ராண்டின் இடத்தில் நேதன் லேமனையும் வைத்து மனம் யோசிக்கிறது. இவர்களின் ஆலோசனைகளை களத்தில் கச்சிதமாக நிறைவேற்றும் கேப்டனாக மோர்கன் கவர்கிறார்!

(கொல்கத்தா அணியை MoneyBall ன் ஆக்லாந்து அணியோடு ஒப்பிட்டதால் ஒரு விஷயம் சொல்கிறேன். அந்த படத்தில் ஆக்லாந்து அணி 20 போட்டிகளை தொடர்ந்து வென்றிருந்தாலும் இறுதிப்போட்டியில் சென்று தோற்பார்கள். அப்படித்தான் படம் முடிந்திருக்கும்.

banner

Related Stories

Related Stories