விளையாட்டு

#IPL2021 - பலவீனமான சன்ரைசர்ஸுக்கு எதிராக தோற்ற கோலி அணி.. காரணம் என்ன?

வெற்றியோடு பாசிட்டிவ் மனநிலையோடு ப்ளே ஆஃப்ஸ் செல்ல வேண்டியது முக்கியம். இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது அதில் வெற்றியோடு முடிப்பார்கள் என நம்புவோம்!

#IPL2021 - பலவீனமான சன்ரைசர்ஸுக்கு எதிராக தோற்ற கோலி அணி.. காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கெதிரான போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருக்கும் அணி. ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை முதலில் இழந்த அணி. பெங்களூர் ப்ளே ஆஃப்ஸ்க்கு ஏற்கனவே தகுதிப்பெற்றுவிட்ட அணி. வலுவான அணி. ஆனால், நேற்று சன்ரைசர்ஸிடம் பெங்களூர் அணி தோற்றிருக்கிறது. 142 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தனர்.

பெங்களூர் அணியின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?

தேவ்தத் படிக்கலின் பேட்டிங்:

பெங்களூர் அணியின் ஓப்பனரான தேவ்தத் படிக்கல் நேற்று 52 பந்துகளில் 41 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 78 மட்டுமே. இந்த சீசனில் அவருடைய ஆவரேஜ் ஸ்ட்ரைக் ரேட்டான 126 ஐ விட இது மிகவும் குறைவு. டி20 ஐ பொறுத்தவரைக்கும் 78 ஸ்ட்ரைக் ரேட்டெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இது மிக மோசமான இன்னிங்ஸ். பெங்களூர் அணி தங்களின் 20 ஓவரில் 50 டாட்களை ஆடியிருந்தது. இந்த 50 டாட்டில் 20 டாட்கள் பவர்ப்ளேயில் மட்டுகே வந்திருந்தது. காரணம், தேவ்தத் படிக்கல். சித்தார்த் கௌல் வீசிய ஒரு ஓவரையே மெய்டனாக்கி விட்டிருந்தார். கடைசியில் நான்கு ரன்களில் தோற்றதை பார்க்கும் போது தேவ்தத் படிக்கல் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் அதாவது ஒரு பந்துக்கு ஒரு ரன் அடித்திருந்தால் கூட அணி வென்றிருக்குமே என்றுதான் தோன்றியது.

குழப்பும் நம்பர் '3':

பெங்களூர் அணியை பொறுத்தவரைக்கும் பேட்டிங் ஆர்டரில் நம்பர் 3 இடத்தில் யாரை இறக்குவதென்பது பெருங்குழப்பமான விஷயமாக இருக்கிறது. இந்த சீசனின் முதல் பாதியில் ரஜய் பட்டிதர், ஷபாஷ் நதீம், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களை இறக்கியிருந்தனர். இந்த இரண்டாம் பாதியில் ஸ்ரீகர் பரத் எனும் வீரரை இறக்கியிருந்தனர். நான்கு போட்டிகளில் அவர் இறக்கப்பட்டார். கொஞ்சம் நன்றாகவே ஆடியிருந்தார். ஆனால், கடந்த இரண்டு போட்டிகளாக டேன் கிறிஸ்டியன் இறக்கப்படுகிறார். அவர் வந்த வேகத்திலேயே அவுட் ஆகி செல்கிறார். நேற்றும் 1 ரன்னில் அவுட் ஆகியிருந்தார். இடையில் இவர் திணிக்கப்படுவதால் மேக்ஸ்வெல், டீ வில்லியர்ஸ் மாதிரியான முக்கிய வீரர்கள் இன்னும் ஒரு ஆர்டர் கீழிறங்கி ஆட வேண்டியிருக்கிறது. இதனால் அவர்களுக்கு போதுமான பந்துகள் கிடைப்பதே இல்லை.

டீ வில்லியர்ஸுக்கு கிடைக்காத பந்துகள்:

பெங்களூர் அணி வெற்றிபெற கடைசி 5 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. க்ரீஸில் டீ வில்லியர்ஸ் இருந்தார். ஆனாலும், பெங்களூர் தோற்றது. காரணம், அவருக்கு தேவையான பந்துகள் கிடைக்கவே இல்லை. 15 வது ஓவரில் உள்ளே வந்தவர் மொத்தமே 13 பந்துகளைத்தான் சந்தித்திருந்தார். அதுவும் கடைசி 3 ஓவர்களில் வெறும் 6 பந்துகளை மட்டுமே சந்தித்திருந்தார். டீ வில்லியர்ஸ் கூடுதல் பந்துகளை சந்தித்திருந்தால் ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கக்கூடும்.

பெங்களூர் அணி ப்ளே ஆஃப்ஸ்க்கு ஏற்கனவே தகுதிப்பெற்றுவிட்டது. ப்ளே ஆஃப்ஸ்க்கு செல்வதற்கு முன் வெற்றியோடு செல்ல வேண்டும். கடந்த சீசனில் ப்ளே ஆஃப்ஸ்க்கு முன்பாக ஆடிய 4 போட்டிகளில் பெங்களூர் அணி தோற்றிருந்தது. ப்ளே ஆஃப்ஸிலும் அதே தோல்வியை தொடர்ந்திருந்தது. வெற்றியோடு பாசிட்டிவ் மனநிலையோடு ப்ளே ஆஃப்ஸ் செல்ல வேண்டியது முக்கியம். இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது அதில் வெற்றியோடு முடிப்பார்கள் என நம்புவோம்!

banner

Related Stories

Related Stories