ஒலிம்பிக் போட்டியின் களம் என்பது வேறு மாதிரியாக உள்ளது. அது போன்ற களத்தில் விளையாட இந்தியாவில் நல்ல தரம் வாய்ந்த களமும், பயிற்சியும் இன்னும் அதிகம் தேவையாக உள்ளது என ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழக தடகள வீரர் ஆரோக்கிய ராஜிவ் கூறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டவர் திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ். இன்று ரயில் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவருக்கு ரயில் நிலையத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆரோக்கியராஜ்,
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு முன்பை விட சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இருந்த போதும் இன்னும் கூடுதல் பயிற்சிகள் தேவைப்படுகிறது. சிறு சிறு தவறுகள் செய்ததால் எங்களால் பதக்கம் வெல்ல முடியவில்லை. அடுத்த முறை அந்த தவறுகளை சரி செய்து நிச்சயம் வெற்றி பெறுவோம்.
தடகள போட்டியில் முதன் முறையாக இந்தியா தங்கம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த தருணத்தில் நாங்கள் அங்கு இருந்தோம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. ஒலிம்பிக் போட்டியின் களம் என்பது வேறு மாதிரியாக உள்ளது. அது போன்ற களத்தில் விளையாட இந்தியாவில் நல்ல தரம் வாய்ந்த களமும், பயிற்சியும் இன்னும் அதிகம் தேவையாக உள்ளது. பயிற்சியின் போது எங்களுக்கான பிரேத்யேக உணவுக்கு கூடுதல் பணம் செலவாகிறது. அதற்கு அரசு உதவி செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.