சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பையை வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல். ராகுலே டாஸை வென்றார். பேட்டிங்கை தேர்வு செய்வார் என எதிர்பார்க்கையில் பௌலிங்கை தேர்வு செய்து ட்விஸ்ட் கொடுத்தார்.
இதன்படி, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பில் ரோஹித் சர்மாவும் டீகாக்கும் ஓப்பனர்களாக களமிறங்கினர். முதல் ஓவரையே 5 வது பௌலரான ஹென்றிக்ஸை வைத்து தொடங்கினார் ராகுல். அடுத்த ஓவரை பகுதி நேர பந்து வீச்சாளரான தீபக் ஹூடாவிடம் கொடுத்தார். ராகுலின் இந்த சர்ப்ரைஸ் மூவ்களுக்கு பலனும் கிடைத்தது. ஆஃப் ஸ்பின்னரான ஹீடா விசிய ஓவரில் இடக்கை பேட்ஸ்மேனான டீகாக் மிட் ஆனில் கேட்ச் ஆகி சீக்கிரமே வெளியேறினார்.
இதன் பிறகு, நம்பர் 3 இல் இஷன் கிஷன் களமிறங்கினார். இஷன் கிஷன் - ரோஹித் இருவருமே டெஸ்ட் மேட்ச் போன்றே மெதுவாக ஆடிக் கொண்டிருந்தனர். இதனால் பவர்ப்ளே முடிவில் வெறும் 21 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது மும்பை அணி. பவர்ப்ளேக்கு பிறகு, இளம் வீரரான ரவி பிஷ்னோயிடம் ஓவரை கொடுத்தார் ராகுல்.
ஒரு நல்ல கூக்ளியில் இஷன் கிஷனை எட்ஜ்ஜாக்கி வெளியேறினார் பிஷ்னோய். 17 பந்துகளை சந்தித்திருந்த இஷன் கிஷன் 6 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார். நம்பர் 4 இல் சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். ரோஹித்-சூரியகுமார் இந்தக் கூட்டணிதான் மும்பை அணியின் ஸ்கோரை கொஞ்சம் உயர்த்தியது.
இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரி அடித்து நன்றாக ஆடினர். இருவரும் ஆடிய 11-15 ஓவர்களில் 48 ரன்கள் வந்தது. ரவி பிஷ்னோய் வீசிய 17 வது ஓவரில் 33 ரன்களில் இருந்தபோது சூரியகுமார் யாதவ் கெய்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷமி வீசிய அடுத்த ஓவரிலேயே அரை சதம் கடந்திருந்த ரோஹித் சர்மா கேட்ச் ஆகி அவுட் ஆனார்.
நன்கு செட்டில் ஆகி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மா 63 ரன்களில் வெளியேறினார். கடைசி இரண்டு ஓவர்களில் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, க்ரூணால் பாண்ட்யா போன்றோர் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கையில் அவர்களும் சொதப்பவே செய்தனர். கடைசி இரண்டு ஓவர்களில் ஒரே ஒரு சிக்சருடன் 17 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 131 ரன்களை மட்டுமே எடுத்தது.
மும்பை அணியின் குறைவான ஸ்கோருக்கு மிடில் ஆர்டர் சொதப்பியது ஒரு காரணமாக இருந்தாலும், பவர்ப்ளேயை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளாததும் பின்னடைவாக அமைந்தது. முதல் 6 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது மும்பை அணி. 10.1 ஓவரில்தான் 50 ரன்களையே கடந்தது.
132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. மும்பை அணியைப் போல பவர்ப்ளேயில் சொதப்பிவிடக்கூடாது என்பதில் பஞ்சாப் அணி தெளிவாக இருந்தது. கே.எல்.ராகுலும் மயங்க் அகர்வாலும் ரிஸ்க் எடுத்து சில பவுண்டரிகளையும் சிக்சரையும் அடித்தனர்.
க்ரூணால் பாண்ட்யா வீசிய இரண்டாவது இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரின் விளைவாக 15 ரன்கள் வந்திருந்தது. இப்படியான ஆட்டத்தின் மூலம் பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி. பவர்ப்ளே முடிந்த பிறகும் ராகுல் சஹாரின் ஓவரில் ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட்டுக்கு முயன்ற மயங்க் அகர்வால் 25 ரன்களில் வெளியேறினார்.
நம்பர் 3 இல் கிறிஸ் கெய்ல் களமிறங்கினார். கே.எல்.ராகுல் - கெய்ல் இந்த கூட்டணி எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் நின்று நிதானமாக பொறுப்பாக ஆடியது. பௌலர்கள் தவறாக வீசிய பந்துகளை மட்டுமே பவுண்டரிக்கு விரட்டினர். கடைசிக் கட்டத்தில் கொஞ்சம் அழுத்தம் கூடுவது போன்ற சூழல் உண்டானவுடன் கெய்ல் சில சிக்சர்களை பறக்கவிட்டார்.
இறுதியாக, 18 வது ஓவரில் ராகுல் ஒரு பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை எட்ட வைத்தார். ராகுல் 60 ரன்களிலும் கெய்ல் 43 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ந்து தோல்வியடைந்துக் கொண்டே இருந்த பஞ்சாப் அணி இந்த போட்டியை வென்றதன் மூலம் உற்சாகம் அடைந்துள்ளது. இந்த சீசனில் மும்பை அணி ஒரு சாம்பியன் அணி போல ஆட தவறுவது மும்பை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.