ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. 1877–ல் மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி. அன்று முதல் இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸியின் ஆதிக்கம் சற்றும் குறையவில்லை. அத்தகைய பாரம்பர்யத்தைப் பெற்றிருக்கும் ஆஸி டெஸ்ட் அணியைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்.
ஓவருக்கு எட்டு பந்துகள்:
1924–25 சீசனில் ஆஸி மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், ஒரு ஓவருக்கு எட்டு பந்துகள் வீசப்பட்டது. 1936–37 சீசனில் இருந்து 1978–79 சீசன் வரை அந்த ஃபார்முலா தொடர்ந்தது. ஆஸ்திரேலியா தவிர்த்து, தென்னாப்ரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகளும், பல்வேறு காலகட்டங்களில் டெஸ்ட் போட்டிகளில் ஓவருக்கு எட்டு பந்துகளை வீசியுள்ளன. கடைசியாக, ஆஸி மற்றும் நியூஸிலாந்தில் 1978–79 சீசனில் எட்டு பந்துகள் வீசப்பட்டன. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேச அணிகள் சொந்த மண்ணில் நடந்த போட்டிகளில் ஓவருக்கு ஆறு பந்துகள் மட்டுமே வீசின.
அலுமினிய பேட்டுடன் வந்த டென்னிஸ் லில்லி:
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, 1979–ல் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்தது. ஆஸி ஒரு கட்டத்தில் 232/8 என தடுமாறியது. முதல் நாள் முடிவில் டென்னிஸ் லில்லி ஒன்பதாவது பேட்ஸ்மேனாக இறங்கி ஆட்டமிழக்காமல் 11 ரன்கள் எடுத்திருந்தார். அதுவரை மரக்கட்டையால் ஆன பேட் வைத்திருந்தார், மறுநாள் ஆட்டம் தொடங்கியதும் அலுமினியத்தால் ஆன பேட்டை வைத்து இன்னிங்ஸை தொடங்கினார். அது லில்லியின் நண்பரான முன்னாள் கிளப் கிரிக்கெட்டர் தயாரித்த பேட். இயான் போத்தம் வீசிய நான்காவது பந்தை டிரைவ் செய்தபோது, பேட்டில் இருந்து உலோகத்தினாலான சத்தம் வந்தது. இதை உணர்ந்த கேப்டன் கிரேக் சேப்பல், உடனடியாக 12th மேன் ராட்னி ஹக் மூலம், இரண்டு மரத்தினால் செய்யப்பட்ட பேட்களை கொடுத்து அனுப்பினார். அதற்குள் இங்கிலாந்து கேப்டன் மைக் பிரியர்லி அம்பயர்களிடம், லில்லி பந்தை சேதப்படுத்துவதாக முறையிட்டார். அம்பயர்கள் லில்லியிடம் நீண்ட நேரம் விவாதம் செய்தனர். ஆனால், அந்த சமயத்தில், மரத்தினால் செய்யப்பட்ட பேட்கள் மூலமே விளையாட வேண்டும் என ஐ.சி.சி விதிமுறைகளில் இல்லை என லில்லி பிடிவாதம் செய்துவிட்டார். சிறிது நேரத்தில் கிரேக் சேப்பல் மர பேட்டை தூக்கிக் கொண்டு, பெவிலியனிலிருந்து கிளம்பவும், லில்லி வேறு வழியில்லாமல் பேட்டை மாற்றிக்கொண்டார்.
வெறும் 6 சிக்ஸர்களே அடித்த பிராட்மேன்!
ஆச்சர்யமாக இருக்கும், டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் என கருதப்படும் சர் டொனால்டு பிராட்மேன், 1928–ல் முதன்முறையாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதில் இருந்து 1948 வரை, 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 29 சதங்களும், 13 அரை சதங்களும் அடித்துள்ளார். ஆனால், தன் ஒட்டுமொத்த கரியரிலும் ஆறே ஆறு சிக்ஸர்கள் மட்டும்தான் அடித்துள்ளார்.
75 ஆண்டுகளாக லார்ட்ஸில் ஆஸி தோற்றதில்லை!
1934–ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸி டெஸ்ட் போட்டியில் தோற்றது. அதன்பின், 75 ஆண்டுகளாக, அதாவது 2009 வரை அங்கு தோல்வியைச் சந்தித்ததே இல்லை. லார்ட்ஸில் 18 டெஸ்ட்களில் விளையாடி ஒன்பதில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், 2009 ஆஷஸ் தொடரில், இங்கிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
பால்காரர் டு ஃபாஸ்ட் பெளலர்
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ராட்னி ஹாக், தன் டெஸ்ட் கரியரில் 123 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஆனால், அவர் கிரிக்கெட்டர் ஆவதற்கு முன்பாக பால்காரராக இருந்துள்ளார். ஓய்வுக்குப் பின், மெல்போர்னில் பல ஆண்டுகளாக பழக்கடை நடத்தி வந்தார்.
ஸ்டீவ் வாஹ் சதத்துக்கு வேட்டு வைத்த மார்க் வாஹ்!
ஒரு காலத்தில் ஸ்டீவ் வாஹ் 90 ரன்களுக்கு மேல் அவுட்டாவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 1995–ல் பெர்த்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில், 99 ரன்கள் எடுத்திருந்தார் ஸ்டீவ் வாஹ். அப்போது எதிர்முனையில் இருந்த கிரேக் மெக்டெர்மட்டுக்குப் பதிலாக, ஸ்டீவ் வாஹ் சகோதரர் மார்க் வாஹ் பை ரன்னராக வந்திருந்தார். ஸ்டீவ் ஸ்ட்ரைக்கர் எண்டில் நிற்கும்போது, ஸ்ட்ரெய்ட்டில் தட்டிவிட, அதற்குள் எதிர்முனையில் இருந்த மார்க் வாஹ் அவசரப்பட்டு ஓடி ரன் அவுட்டாகிவிடுவார். இல்லாத ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு மார்க் வாஹ் அவுட்டானதால், ஸ்டீவ் வாஹ் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல், விரக்தியுடன் பெவிலியன் திரும்புவார். அந்த டெஸ்ட்டில் ஆஸி 329 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். ஆனாலும், ஸ்டீவ் வாஹ் சதம் அடிக்காதது ஏமாற்றமே. ஒட்டுமொத்தத்தில் ஸ்டீவ் வாஹ் தன் டெஸ்ட் கரியரில், பத்து முறை 90 ரன்களுக்கு மேல் அடித்து சதம் அடிக்காமல் மிஸ் செய்துள்ளார்.
7 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்திய ஒரே நாடு ஆஸி!
1970–71 ஆஷஸ் தொடர் ஏழு போட்டிகளைக் கொண்ட தொடராக அமைந்தது. ஆனால், இந்த பரிச்சார்த்த முயற்சி ஆஸிக்கு வினையாகிவிட்டது. அந்தத் தொடரை இங்கிலாந்து வென்றது. தொடரின் பாதியிலேயே, அதாவது ஆறாவது போட்டி டிராவில் முடிந்ததும், ஆஸி கேப்டன் பில் லாரி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இளம் வீரரான கிரேக் சேப்பல் புதிய கேப்டனாக பொறுப்பேற்றார். அதன்பிறகே ஆஸி டெஸ்ட் கிரிக்கெட்டை கட்டி ஆண்டது!