சச்சினின் சாதனையான 100 சர்வதேச சதங்களை முறியடிக்கக்கூடிய ஒரே நபர் விராட் கோலிதான் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் 100 சர்வதேச சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமை சச்சின் டெண்டுல்கரையே சாரும். அவர் இந்த சாதனையை 2012-ம் ஆண்டு படைத்தபோது இர்பான் பதானும் இந்திய அணியின் ஓர் அங்கமாக இருந்தார். 2012-ம் ஆண்டு தாக்காவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்தச் சாதனையை சச்சின் படைத்தார்.
இந்நிலையில் அதுகுறித்துப் பேசியுள்ள இர்ஃபான் பதான் “அந்த சாதனையை எப்போதும் ஒரு இந்தியரே முறியடிக்கவேண்டும் என்று நான் ஆசைப்பட்டிருக்கிறேன். அதை செய்வதற்கான திறமையும், உடல் உறுதியும் விராட் கோலிக்கே உள்ளது. இவை இரண்டும்தான் அந்த சாதனையை முறியடிக்கத் தேவையானவை.
100 சதங்களை அடிப்பதற்கு அவருக்கு இன்னும் 30 மட்டுமே தேவை என்று எண்ணுகிறேன். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்த சாதனையை முறியடிப்பார் என எண்ணுகிறேன். அவருடைய இலக்கும் அதுவாகத்தான் இருக்கும் என நான் நம்புகிறேன்.” என ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
மேலும் விராட் கோலி இதை பற்றிப் பேசாது இருந்தாலும், சச்சினின் இந்த சாதனையை ஒருவர் அடையமுடியுமென்றால் அது விராட் கோலிதான் என்றும், குறைந்த காலத்திலேயே பெரும் விஷயங்களை அவர் சாதித்துள்ளார் என்றும் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
கோலி தற்போது 70 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். அதில் 43 ஒருநாள் சதங்கள் மற்றும் 27 டெஸ்ட் சதங்கள். கோலி இந்திய அணிக்காக விளையாடத்தொடங்கி 12 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.