ஆஸ்திரேலியாவில் 10 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை T20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய சிங்கப்பெண்கள், 2வது லீக் ஆட்டத்தில் வங்கதேச வீராங்கனைகளுடன் நாளை விளையாடவுள்ளனர்.
இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இந்திய வீராங்கனைகள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய வீராங்கனைகள் வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்கினர்.
தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்திய வீராங்கனைகள் வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளனர். முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் எதிர்பார்த்த அளவு கொடுக்கவில்லை. மந்தனா, ஷஃபாலி, ஜெமிமா என தொடக்க வீராங்கனைகள் மந்தமாக விளையாடினாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தீப்தி சர்மா 49 ரன்களை சேர்த்தார்.
பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காண்பித்த பூனம் யாதவ், 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தார். ஆகையால், பேட்டிங் வரிசையை சரிசெய்ய வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது. வலுவான பந்துவீச்சு இருந்தாலும், வங்கதேசத்துடனான ஆட்டத்திலும் இதே உத்வேகம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2வது லீக் ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால், அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும் முனைப்புடன் இந்திய வீராங்கனைகள் இந்த போட்டியில் களம் காணவுள்ளனர்.
வங்கதேச அணியை பொறுத்தவரை ஆல் ரவுண்டர் Jahanara Alam, Fargana Hoque இருவரும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றனர். 2018 T20 ஆசிய கோப்பை தொடரில் லீக், மற்றும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி பட்டம் வெல்ல Fargana Hoque முக்கிய பங்கு வகித்தார். ஆகையால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இவ்விரு அணிகளும் கடைசியாக விளையாடியுள்ள 5 T20 ஆட்டங்களில் 3ல் இந்தியாவும், 2-ல் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளன. ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா-வங்கதேசம் மோதும் போட்டிக்கு எழும் எதிர்பார்ப்புக்கு நிகராக, மகளிர் உலகக்கோப்பையிலும் இந்தியா-வங்கதேச போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.