கூடைப்பந்து அரங்கில் முடிசூடா மன்னன் அமெரிக்காவின் கோப் பிரயண்ட். அமெரிக்க கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரரான 41வயதான ஓய்வு பெற்ற பிரயண்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக சுமார் 20 ஆண்டுகள் விளையாடியுள்ளார். 5 முறை என்.பி.ஏ சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உலகத்தை திரும்பி பார்க்க வைத்த பிரயண்ட், ஒலிம்பிக் போட்டிகளிலும் இரண்டு முறை தங்கத்தை அலங்கரித்து கூடைப்பந்தில் நட்சத்திர வீரராக வலம் வந்தவர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள John Wayne விமான நிலையத்தில் இருந்து Sikorsky S-76B என்ற தனியார் ஹெலிகாப்டரில் கோப் பிரயண்ட், தனது 13வயது மகளுடன் பயணித்தார். கோப் மட்டுமல்லாது அவருடன் சக பயிற்சியாளர்கள், பயிற்சியாளரின் மனைவி, குழந்தைகள் என 8 பயணிகள், ஒரு பைலட் உள்பட மொத்தம் 9 பேர் அந்த ஹெலிகாப்டரில் பயணித்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சுமார் 30 மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்த போது, Las Virgenes சாலையில், Willow Glen என்ற இடத்தின் அருகே கலாபசாஸ் என்ற மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது.
ஹெலிகாப்டர் நிலைகுலைவதை அறிந்த விமானி, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வருவதற்குள் மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்ட சூழலில், விழுந்த சிறிது நேரத்திலேயே ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் ஒருவரை கூட உயிருடன் மீட்க முடியவில்லை. மோசமான வானிலை காரணமாக இந்த ஹெலிகாப்டர் விபத்து நேர்ந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடைப்பந்து ஜாம்பவான் கோப் பிரயண்ட் மரணம், உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், விளையாட்டு பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் கோப் பிரயண்ட் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோப் பிரயண்ட் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு பொது வெளியில் பிரயண்ட் உருவப்படத்தை வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.