பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
ஆஸ்திரேலியா தரப்பில் டேவிட் வார்னர் மற்றும் பர்ன்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்கத்திலியே பாகிஸ்தான் அதிர்ச்சி அளித்தது. 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பர்ன்ஸ் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகியோர் விக்கெட் விழாத வண்ணம் ஆடினர். பின்னர் அதிரடியாக விளையாடிய வார்னர் இரட்டை சதம் அடித்தார். அதேபோல, லபுஷேன் சதமடித்தார். 162 ரன்கள் எடுத்த நிலையில் லபுஷேன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். அவர் 23 ரன்களை கடந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 7000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஸ்மித் 126 இன்னிங்ஸில் கடந்துள்ளார்.
இதற்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீர வால்டர் ஹம்மண்ட் 131 இன்னிங்ஸில் 7000 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த 73 ஆண்டு கால சாதனையை தகர்த்தார் ஸ்மித்.
டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் 26 சதங்களையும் ,27 அரைசதங்களையும் அடித்துள்ளார். மேலும், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. பாகிஸ்தான் பந்துவீச்சை சின்னாபின்னமாக்கிய வார்னர் முச்சதம் அடித்து அசத்தியுள்ளார். இது இவரது முதல் முச்சதமாகும். 39 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் வார்னர் ஆட்டமிழக்காமல் 335 ரன்கள் குவித்துள்ளார்.