உலகின் தற்போதைய மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் திகழ்கிறது. இதைவிடப் பெரிதாக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டு வருகிறது.
அகமதாபாத் நகரில் மொடீரா பகுதியில் 63 ஏக்கர் பரப்பளவில், 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த மைதானம் கட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ.700 கோடி செலவில் இந்த மைதானம் கட்டப்பட்டு வருகிறது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத்த ஆஸ்திரேலியாவின் பாப்புலஸ் நிறுவனம்தான் இந்த மைதானத்தையும் வடிவமைத்துள்ளது.
இந்த மைதானத்தில் 76 கார்ப்பரேட் பாக்ஸ்கள், 4 ஓய்வறைகள், 3 பயிற்சி மைதானங்கள், உள்ளரங்க கிரிக்கெட் அகாடமி, நீச்சல் குளம் ஆகியவை உள்ளன. இந்த மைதானத்தில் 3,000 கார்கள், 10,000 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும்.
முந்தைய மொடெரா ஸ்டேடியத்தில் 54,000 மக்கள் ஒரே சமயத்தில் அமர்ந்து போட்டிகளைக் காணும் வசதி இருந்தது. இது 2016ல் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் மூலம் புனரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 2020ல் ஸ்டேடியம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த மைதானத்தில் முதல் போட்டியாக உலக லெவனுக்கும் இந்திய அணிக்கும் இடையேயான T20 போட்டி நடைபெறும் என கூறப்பட்டுகிறது.