சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 937 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 10 புள்ளிகள் குறைந்து 899 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். புஜாரா தொடர்ந்து 4வது இடத்தில் உள்ளார். ஒன்பதாம் இடத்திலிருந்த ரகானே ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரு சதம், ஒரு இரட்டை சதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா முதன்முதலாக முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னர் ரோஹித் 54வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி வீரர்களில் 4 பேர் முதல் பத்து இடத்திற்குள் உள்ளனர்.
ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தற்போது 10ம் இடத்திலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 2ம் இடத்திலும் T20-யில் 7ம் இடத்திலும் உள்ளார். இதன்மூலம், ரோஹித் சர்மா மூன்று வகை கிரிக்கெட் தரவரிசையிலும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக கவுதம் கம்பீர், விராட் கோலி ஆகியோர் தான் மூன்று வடிவங்களிலும் டாப் 10-ல் இடம்பெற்றிருந்தனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஷமி 15ம் இடத்துக்கும் உமேஷ் யாதவ் 24ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். பும்ரா ஒரு இடம் பின்தங்கி 4ம் இடத்திலும் ரபாடா 2ம் இடத்திலும் பாட் கம்மின்ஸ் முதலிடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் ரவிந்திர ஜடேஜா தொடர்ந்து இரண்டாம் இடத்திலேயே நீடிக்கிறார். மற்றோரு இந்தியரான அஸ்வின் ஒரு இடம் சரிந்து ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.