தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ராஞ்சியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மாவிற்கு பதில் சபாஸ் நதீம் சேர்க்கப்பட்டார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், ரோகித் சர்மாவும் களம் கண்டனர். இதில் மயங்க் அகர்வால் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து புஜாராவும் ரன் ஏதும் எடுக்காமல் ரபாடா பந்துவீச்சில் வீழ்ந்தார். கடந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி 12 ரன்களில் அன்ரிச் பந்துவீச்சில் வெளியேறினார்.
இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானேவும் ரோஹித் சர்மாவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 132 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா அடித்த 6 சதம் இதுவாகும். இத்தொடரில் ரோஹித் சர்மா அடிக்கும் 3ஆவது சதம் இதுவாகும். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 2000 ரன்களைக் கடந்துள்ளார்.
இந்த சதத்தின் மூலம் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 3 சதங்கள் விளாசிய 2வது இந்திய வீரரானார் ரோஹித் சர்மா. முன்னதாக கவாஸ்கர் இந்த சாதனையை 3 முறை செய்துள்ளார்.
இந்தபோட்டியில் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்கள் விளாசினார். இதன்மூலம் ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். முன்னதாக மேற்கிந்திய வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் 15 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
இந்த ஆண்டில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 9 சதங்கள் விளாசியுள்ளார் ரோஹித் சர்மா. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
9 - சச்சின் டெண்டுல்கர், 1998
9 - கிரீம் ஸ்மித் , 2005
9 - டேவிட் வார்னர், 2016
9 - ரோஹித் சர்மா, 2019*