தென் ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதில் முதல் ஒருநாள் போட்டியில், மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி, தொடரை வென்ற இந்திய மகளிர் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதில், “இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ்க்கு வாழ்த்துகள். சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் வாழ்த்துக்கள் கிடைத்த சந்தோசத்தில், “ என் வாழ்நாளில் நான் பார்த்து வளர்ந்த ஒருவரிடம் இருந்து, இந்த வாழ்த்துகளை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று மிதாலி ராஜ் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரின் பதிவுக்கு கீழே பெண் ஒருவர், “இவருக்கு ஆங்கிலம், தெலுங்கு, இந்தி தெரியும். ஆனால் தமிழ் மட்டும் தெரியாது என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு பதில் அளித்த மிதாலி ராஜ், “தமிழ் என் தாய் மொழி. நான் தமிழ் நன்றாக பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை. அதற்கு மேல் நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார். அவரின் இந்த பதிவுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது.