ஒன்றிய பா.ஜ.க அரசின் அடையாளமாக விளங்கும் பிரதமர் மோடி, தேர்தல் நேரங்களில் பொய் பிரச்சாரங்களை முன்வைப்பது தடையுறாமல் நடந்து வருகிறது. அதனால், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த பிறகும், பிரதமர் மோடியால் முன்வைக்கப்படும் பொய் குற்றச்சாட்டுகள் தீர்ந்ததாக தெரியவில்லை.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், “பட்டியலின மற்றும் பழங்குடியினத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருக்கிறார்.
கடுகளவு ஆதாரம் கூட இல்லாத ஒரு கருத்தை சொல்லக்கூடிய துணிச்சல் பிரதமர் மோடி ஒருவருக்குத் தான் இருக்க முடியும். இத்தகைய குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மீது கூறுவதற்கு முன்பாக, பா.ஜ.க. ஆட்சி செய்கிற மாநிலங்களில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்படுகிற கொடுமைகள் குறித்து ஒன்றிய பா.ஜ.க. அரசின் சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் 2022 இல் வெளியிட்ட அறிக்கையை அவர் எப்படி மறந்து விட்டார் என்று தெரியவில்லை.
அந்த அறிக்கையின்படி பா.ஜ.க. ஆட்சி செய்கிற மாநிலங்களில் இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் தான் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக நடப்பதாக புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்ந்து பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகள் 51,656. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 12,287 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் இது 23.78 சதவிகிதமாகும்.
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட அடிப்படையில் தான் இந்த புள்ளி விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோல, அடுத்த நிலையில் பா.ஜ.க. ஆளுகிற மத்தியப்பிரதேச மாநிலத்தில் 7732 வழக்குகள் தலித்துகளுக்கு எதிரான தாக்குதலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை 2022 இல் வெளியிடப்பட்டதில் இந்தியா முழுவதும் தலித்துகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகள் 57,582. இது 2021 இல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட 13.1 சதவிகிதம் அதிகமாகும்.
பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதலுக்கு உள்ளான மொத்த வழக்குகள் 10,064. இதுவும் 2021ஆம் ஆண்டை விட 14.3 சதவிகிதம் அதிகமாகும். மேலும், பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் 2022 ஆம் ஆண்டு கணக்கின்படி 32.4 சதவிகிதத்தினர் தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
2020 இல் தண்டிக்கப்பட்ட 39.2 சதவிகிதத்தை விட இது குறைவாகும். இதன்மூலம், தலித்துகளுக்கு எதிரான குற்றவாளிகள் பா.ஜ.க. ஆட்சியில் தண்டனை வழங்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
அதேபோல, உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ரஸ் என்ற இடத்தில் 20 வயது தலித் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்ட கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தது யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தான் நடந்தது. சிகிச்சை பலனின்றி இறந்த அந்த பெண்ணின் சடலத்தை பெற்றோர் சம்மதமில்லாமல் காவல்துறையினரே பலவந்தமாக மயானத்தில் எரித்த கொடுமையும் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தான் நடந்தது. இதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.
பா.ஜ.க.வை பொறுத்தவரை, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படுகிற காரணத்தால் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவே நடந்து வருவதை கடந்த கால வரலாறு உறுதி செய்துள்ளது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்., தலைநகர் தில்லியில் போராட்டங்கள் நடத்தியிருக்கிறது.
டாக்டர் அம்பேத்கர் தலைமையேற்று தயாரித்த அரசமைப்புச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ். என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. அதுகுறித்து கோல்வார்க்கர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவது பா.ஜ.க.வின் நோக்கம். அதற்கு எதிராக பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையின மக்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்பது காங்கிரசின் நோக்கமாகும். அதற்காகத் தான் தலைவர் ராகுல்காந்தி சமூகநீதியின் அடிப்படையில் சாதி வாரி கணக்கெடுப்பு கோரி வருகிறார்.
இன்று உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 34 நீதிபதிகளில் பெரும்பான்மையானவர்கள் உயர்சாதியினரை சார்ந்தவர்களாக உள்ளனர். பட்டியலினம், பின்தங்கிய சமுதாயம், சிறுபான்மையின சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தலா ஒருவர் தான் நீதிபதிகளாக உள்ளனர். இந்நிலையில் இத்தகைய மக்களுக்கு உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைப்பது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, 11 மத்திய பல்கலைக் கழகங்களுக்கான எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாத அவலநிலை உள்ளது. இந்த அநீதியை எதிர்த்துத் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தலைவர் ராகுல்காந்தி போராடி வருகிறார். அதைத் தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களும் தனது தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தி வருகிறார்.
இத்தகைய பரப்புரைகளின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு கருத்தியல் ரீதியாக பெருகி வரும் பேராதரவை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு எதிரானது என்ற அவதூறு குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஆனால் நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் அவதூறு பிரச்சாரத்திற்கு இரையாகாமல் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக திரண்டு வருவது கண்கூடாக தெரிகிறது. எனவே, பிரதமர் மோடியின் சந்தர்ப்பவாத அரசியல் நாட்டு மக்களிடம் எந்த வகையிலும் எடுபடப்போவதில்லை.