அரசியல்

காவிமய போக்கு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது - அரசமைப்பிற்கு முரணானது! : செல்வப்பெருந்தகை அறிக்கை!

காவிமய போக்கு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது - அரசமைப்பிற்கு முரணானது! :  செல்வப்பெருந்தகை அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பா.ஜ.க ஆட்சியில் ஒன்றிய அரசின் பல துறைகளில், காவி சாயல் பூசப்பட்டு வரும் நிலையில், BSNL சின்னத்திலும் காவி புகுந்துள்ளது. இதனை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், “பா.ஜ.க. ஆட்சியில் அனைத்தையும் காவிமயமாக்குகிற போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, வந்தே பாரத் ரயில், டி.டி. நியூஸ் தொலைக்காட்சி லோகோவையும் மாற்றியதை தொடர்ந்து தற்போது, ஒன்றிய பா.ஜ.க. அரசு பி.எஸ்.என்.எல். லோகோவையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.

முன்பு ஆங்கிலத்தில் இந்தியாவை இணைப்போம் என்றிருந்தது, தற்போது பாரதத்தை இணைப்போம் என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறங்கள் பா.ஜ.க. கொடியின் நிறத்தை ஒத்திருக்கிறது. இதன்மூலம் பா.ஜ.க.வின் காவிமயமாக்குகிற அரசியல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் நவீன கோயில்கள் என்று அழைத்து மகிழ்ந்தார். அத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பி.எஸ்.என்.எல். அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அக்டோபர் 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, தகவல் தொடர்புத் துறையோடு இணைக்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஒன்றிய அரசுக்கு நூறுசதவிகிதம் சொந்தமான பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்று மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்துள்ளதற்கு முக்கிய காரணம் ஒன்றிய அரசின் பாரபட்சமான செயல்பாடு தான் என்பது ஊரறிந்த உண்மை.

காவிமய போக்கு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது - அரசமைப்பிற்கு முரணானது! :  செல்வப்பெருந்தகை அறிக்கை!

வணிகரீதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கடுமையாக போட்டிப்போடும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரிவழங்கும் ஒன்றிய அரசு வேண்டுமென்றே அதன் சொந்த நிறுவனம் பிஎஸ்என்எல் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்க வைத்துவிட்டு வேடிக்கைப்பார்த்து மகிழ்ந்துள்ளது.

தொலைத்தொடர்பு அரங்கில் சமமற்ற போட்டி நிலவ வழிசெய்தது ஒன்றிய அரசுதான் . தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் அதிநவீன 4ஜி / 5 ஜி உயர்தொழில்நுட்பத்தில் மொபைல் சேவையை வழங்கி வாடிக்கையாளரை ஈர்த்துவரும் வேளையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றும் பழைய 2ஜி / 3ஜி தொழில்நுட்பத்தில் மொபைல் சேவையை வழங்குவதால் தான் அதனால் தனியார் டெலிகாம் நிறுவனங்களுடனான போட்டியில் வெல்ல முடியாமல் போனது.

2012 ல் 4ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நம்நாட்டில் தனியார் கம்பெனிகள் மொபைல் சேவையை வழங்குகையில் பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பத்திற்காக இன்றுவரை காத்துக் கிடக்கிறது. 2019 அக்டோபரில் மோடி அரசு 4ஜி தொழில்நுட்பத்தை வழங்கிட தீர்மானித்த பின்பும் இன்றுவரை அது நாடுமுழுவதிலும் நடைமுறையாகவில்லை.

ஆனால், தொலைத்தொடர்பு வியாபாரத்தில் இன்றுவரை கால்பதிக்காத அதானி நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உயர்நவீன 5ஜி அலைக்கற்றையை அனுமதித்து உள்ளது . இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையின் காரணமாகத்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் பத்தாண்டுக்கும் மேலாக நட்டத்தில் செயல்படுகிறது. நவீனமயம் - விரிவாக்கம் பற்றிய அதன் கோரிக்கைகளை ஒன்றிய அரசு பலகாலமாக கண்டுக்கொள்ளாமல் புறக்கணித்ததே பிஎஸ்என்எல் சரிவை சந்தித்ததற்கு மிகமுக்கிய காரணமாகும் . தொலைத்தொடர்பில் ரூபாய் 3,36,000 கோடி ஆண்டுக்கு வருவாய் வருகிறது . ஆனால் நாடுநெடுக செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் வெறும் ரூபாய் 20000 கோடி மட்டுமே . இது டெலிகாம் அரங்கின் மொத்த வருவாயில் வெறும் 0.06 சதவிகிதம் தான்.

தொடக்கத்தில் வாடிக்கைதாரர்களின் சந்தை பங்கு 21 சதவிகிதமாக இருந்தது, தற்போது 7.9 சதவிகிதமாக குறைந்துள்ளது. மீதி 92 சதவிகிதத்தை தனியார் துறைதான் ஆக்கிரமித்துள்ளது. டிசம்பர் 2023 நிலவரப்படி தொலைபேசி இணைப்புகள் ரிலையன்ஸ் 45.98 கோடி, ஏர்டெல் 38.17 கோடி, வோடபோன் 22.30 கோடி என்ற நிலையில் பி.எஸ்.என்.எல். 9.19 கோடியாக நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்த அளவில் பி.எஸ்.என்.எல். முடக்கப்பட்டு, தனியார் துறை வளர்க்கப்பட்டு போட்டி போட முடியாத நிலையில் முடங்கியிருக்கிறது.

இந்நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார் துறையை விட லாபம் ஈட்டுகிற நிறுவனமாக மாற்ற முடியாத மோடி அரசு அதை காவி மயமாக்குகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமாக முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கைக்கு விரோதமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை காவி மயமாக்குவதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய போக்கு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories