1992-ம் ஆண்டு இந்துத்துவ கும்பல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாக கூறி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள் விசாரணையில் இருந்து வந்தது.அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பாபர் மசூதி இருந்த இடத்தில ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது.
அதன் பின்னர் கடந்த மாதம் 22-ம் தேதி முழுமையாக கட்டிமுடிக்கப்படாத ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இந்த நிலையில், ராமர் கோவில் வழக்கில் தீர்வு காண வேண்டுமென நான் கடவுள் முன் அமர்ந்து வேண்டிக் கொண்டேன் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியா வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளில் நீதிபதி சந்திரசூட்டும் ஒருவராக திகழ்ந்த நிலையில், அவர் தற்போது அந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் "தீர்க்க முடியாத வழக்குகளும் வருவது உண்டு. பாபர் மசூதி வழக்கும் அத்தகைய வழக்குதான்.
மூன்று மாதங்களாக அந்த வழக்கு நீண்டு கொண்டிருந்தது. அதற்கு தீர்வு காண வேண்டுமென நான் கடவுள் முன் அமர்ந்து வேண்டிக் கொண்டேன். தீர்வு கிடைத்தது. தீர்க்க முடியாத பிரச்சினைகளில் நிச்சயமாக கடவுள் நமக்கு வழி காட்டுவார்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.