அரசியல்

இந்தியை திணிக்க முயற்சி செய்கிற ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! : தி.மு.க மாணவர் அணி அறிவிப்பு!

இந்தியை திணிக்க முயற்சி செய்கிற ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! : தி.மு.க மாணவர் அணி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

“தாய் தமிழ்நாட்டில் இந்திக்கு விழா எடுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம்!” என்ற முழக்கத்துடன், இந்திக்கான விழாவினை ரத்து செய்ய வலியுறுத்தியும், இந்தியை எல்லா நிலையிலும் திணிக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அன்னைத் தமிழை அவமதித்து, தலைநகர் சென்னையில் உள்ள ‘சென்னை தொலைக்காட்சி’ நிலையத்தில் ‘இந்தி மாத’க் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னை தொலைக்காட்சியின் “பொன்விழா” கொண்டாட்டங்களும் இன்று (அக்டோபர் 18) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

1968-ஆம் ஆண்டு அலுவல் மொழி தீர்மானத்திலேயே, “எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 14 மொழிகளையும் வளர்க்க மாநில அரசுகளுடன் இணைந்து ஒன்றிய அரசு செயல்பட வேண்டும்” என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், இந்திக்கு மட்டும் சிம்மாசனம் அமைக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஒன்றிய அரசு செயல்படுவது வேதனைக்குரியது.

ஊரெல்லாம் "திருக்குறள்" பற்றி ஒப்புக்குப் பேசி விட்டு, தமிழைப் புறக்கணித்து இப்படி இந்திக்கு மட்டும் தமிழ் மண்ணில் விழா எடுத்து கௌரவிக்க நினைப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் அழகல்ல; சென்னை தொலைக்காட்சிக்கும் நல்லதல்ல!

தமிழ்நாட்டின் ஆளுநராக இருப்பவர், தமிழ்மொழியைப் புறக்கணிக்கும் “இந்தி மாத கொண்டாட்டத்தில்" பங்கேற்று சிறப்பிக்க இருப்பது, செம்மொழித் தமிழை, தமிழ்நாட்டு மக்களைப் புறக்கணிக்கும் செயலாகவே கருதப்படும். இந்தியாவில் தமிழ் உட்பட எத்தனையோ செம்மொழிகள் இருக்கின்றன.

ஒவ்வொன்றும் தனித்துவமும், சிறந்த இலக்கிய வளமும் கொண்டவை. குமரி முதல் இமயம் வரை நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. அவர்கள் அனைவருமே இந்தியக் குடிமக்கள்தாம் எனும்போது, இந்தி மொழியை மட்டும் ஒன்றிய அரசு தூக்கிப் பிடிக்க வேண்டிய தேவை எங்கு வந்தது?

இந்தி மொழிக்கு மட்டும் மக்களின் வரிப்பணத்தில் 'நாள்-வாரம்-மாதம்' எனக் கொண்டாடுவதும், இந்தி மொழியை அலுவலகங்களில் பயன்படுத்தக் கட்டாயப்படுத்துவதும், இந்தியைத் தேசிய மொழி என்று இல்லாத ஒன்றை மீண்டும் மீண்டும் இட்டுக்கட்டுவதும் எந்த வகையில் சமத்துவமாகும்? நாட்டிலே செம்மொழிகள் பல இருக்க, இந்திக்கு மட்டும் நாள், வாரம், மாதம் எனக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?

இந்தியை திணிக்க முயற்சி செய்கிற ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! : தி.மு.க மாணவர் அணி அறிவிப்பு!

சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் ஒருமுகம், தமிழ் மொழிக்கு வேறு முகம் எனும் பாரபட்சமான போக்கை ஒன்றிய அரசு கைவிடுவது எப்போது? இந்தி நாள் கொண்டாட்டங்களின் மூலமாக இந்தியைத் திணிக்கும் போக்கு நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும். இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 351-ஆவது பிரிவைப் பயன்படுத்தும் நிலைமையும் மாற வேண்டும்.

ஏற்கெனவே, பொதிகை எனும் அழகிய பெயரை 'தூர்தர்ஷன்' என்று மாற்றிவிட்டு, தற்போது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயலாக, சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவோடு நடத்தப்படவுள்ள இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா கொண்டாடுவதை கழக மாணவர் அணி வன்மையாக கண்டிப்பதுடன், இவ்விழாவில் பங்கேற்பது தமிழ் மொழியையும், தமிழர்களையும் இழிவுபடுத்தும் செயலாகும் என்பதை கருத்திற்கொண்டு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி, இவ்விழாவினை புறக்கணிக்க வேண்டுமென்று வலியுறுத்தியும், இந்தியை எல்லா நிலையிலும் திணிக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், சென்னை, சிவானந்தா சாலையில் அமைந்துள்ள “சென்னை தொலைகாட்சி” நிலையம் (DD-Tamil) அருகில் இன்று (18.10.2024) மாலை 03.00 மணியளவில், தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக மாணவர் அணியின் பல்வேறு பொறுப்பிலுள்ள நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பெருமளவில் பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன்.

“அண்ணா அறிவாலயம்.”

banner

Related Stories

Related Stories