ரயில்வேக்கு என்று இருந்த தனிப் பட்ஜெட்டை நீக்கி, முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்? என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னைக்கு அருகே கவரைப்பேட்டை என்ற ரயில் நிலையத்தில், பொன்னேரி அருகில் 11.10.2024 அன்று இரவு 8.30 மணியளவில் ரயில் மோதி பெரு விபத்து நடந்துள்ளது. 13 ரயில் பெட்டிகள் சரிந்ததில் பல பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தடத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில்மீது மைசூரில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால், இந்தக் கோர விபத்து நடந்து, ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்தும் உள்ளன.
மோடி அரசில் ஆறு நாள்களுக்கு ஒரு ரயில் விபத்து!
மோடி அரசில் இத்தகைய கோர ரயில் விபத்துகள் ஒன்றல்ல, இரண்டல்ல; 6 நாள்களுக்கு ஒரு விபத்து என்பதுதான் இந்த அரசின் ‘‘சப்கா சாத், சப்கா விகாஸ்‘‘ சாதனையோ என்று சமானிய மக்கள்கூட கேட்கிறார்கள்.மோடி அரசின் ரயில்வே நிர்வாகம் அதிகமான ‘வந்தே பாரத்‘ ரயில்களை ஓட்டி, அதனை நேரிலும், காணொலிமூலமும் அநேக தடங்களில் பிரதமர் மோடியே பச்சைக் கொடி காட்டித் தொடங்கி வைக்கிறார்! மகிழ்ச்சிதான்; ஆனால், பயணம் பத்திரமாகியுள்ளதா?ஆனால், இப்படி ஆறு நாளைக்கு ஒரு விபத்து என்ற விபரீதச் செய்தி அவ்வரசுக்குப் பெருமையா?ரயில்வே பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதா?
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 2014–2019, பிறகு 2024 (மைனாரிட்டி அரசு) ஆகிய காலகட்டங்களில் ரயில்வே துறை நிர்வாகம் எப்படிப்பட்ட அலங்கோல நிர்வாகமாக ஆகி, பல அமைச்சர்கள் மாற்றம் – மக்களுக்கு பெரும் ஏமாற்றம் என்பதைத் தவிர, வேறு என்ன பெருமைப்படத்தக்க சாதனைகள் இத்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன?
எடுத்த எடுப்பில், முந்தைய ஆட்சியில் இருந்த நடைமுறையை தன்னிச்சையாக தலைகீழாக மாற்றி, ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்களுக்கு ஆளாகி, பொது பட்ஜெட்டுக்கு முந்தைய பட்ஜெட்டாக இருந்த ரயில்வே பட்ஜெட் முறை மாற்றப்பட்டு, பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு, ரயில்வேமீது செலுத்தப்பட்ட தனி கவனம் – விவாதங்களே நாடாளுமன்றத்தில் காணாமற்போன நிலைதான் ஒரே மாறுதல்.
லாலுபிரசாத் சாதித்துக் காட்டினாரே!
ராஷ்டிர ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த லாலுபிரசாத் அவர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலு அவர்களும் முறையே அமைச்சர், இணையமைச்சராக ரயில்வே துறையில் இருந்தபோதுதான் அதன் பொற்கால ஆட்சி நடைபெற்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்! பொது பட்ஜெட்டுக்குக் கூடுதல் ரயில்வே பட்ஜெட்டின் லாபத்திலிருந்து பங்களித்தது! சரக்குக் கட்டணம் தனி இடத்தை சிறப்புடனும், பயணிகள் டிக்கெட் விலை ஏற்றப்படாமலேயே வருமானத்தைப் பெருக்கி, நட்டக் கணக்கு முன்பு வந்த துறையில், லாபம் ஈட்டிக் காட்டினார்கள்! அமெரிக்க ஹார்வர்டு பொருளாதார நிபுணர்கள் அன்றைய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத்தை அழைத்து, கருத்து விளக்கம் கேட்டு, சாதனைக்காகப் பாராட்டிப் பெருமைப்படுத்தியதும் உண்டு!
ஆனால், இன்று ‘விபத்து புகழ்தானா?’ – மாநில வளர்ச்சிக்கான ரயில் – பயன் பங்களிப்பு புதுப்புது வழித்தடங்களை ஏற்படுத்தத் திட்டம் – இந்தியா முழுவதிலும், தமிழ்நாட்டிற்கும் பேசப்பட்டு, சில திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இன்றுவரை அவற்றிற்கு எந்த செயல்வடிவமும் இல்லை.
நிதிப் பகிர்வில் எப்படி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள், ஒன்றிய பா.ஜ.க. அரசால் வஞ்சிக்கப்படுகிறதோ, அப்படியே ரயில்வேயில் புதிய திட்டங்கள் அறிவிப்பு ஏதும் இல்லாததோடு, பழைய அறிவிக்கப்பட்ட திட்டங்களும் எடுத்துக்கொள்ளப்பட எந்த அறிவிப்பும் இல்லை. அதிலும், தமிழ்நாட்டிற்கு ரயில்வே துறை ‘பட்டை நாமம்’தான்!கேட்டால், சில ரிப்பேர் செய்த கணக்குகளை – நிதி ஒதுக்கீடுகளைக் காட்டுகிறது!
தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க உடனடி உதவி!
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் போன்ற – நிதி ஒதுக்கீடு – மாநிலத்திற்குத் தரவேண்டியதை எத்தனை போராட்டத்திற்குப் பிறகு ஒதுக்கி, கடனாக ஒரு பகுதி, மற்ற மாநிலங்களில் இல்லாத விசித்திர நிபந்தனை – நிதி அமைச்சகம் வழியேதான் என்று இடையில் ஒரு தடுப்பணை கட்டுவது – போன்ற ஒன்றை நிதியமைச்சகம் அமைத்துள்ளது! இத்தனைக்கும் தமிழ்நாடு அரசின் Fiscal Management என்ற நிதி ஆளுமையை பல பொருளாதார நிபுணர்கள் பாராட்டியும் இந்நிலை!
பிரதமர் மோடி ஆட்சியில், ஜனநாயக ரயிலும், அரசமைப்புச் சட்டம் என்ற தண்டவாளத்திலிருந்து நகர்ந்து விபத்துகளை (கருப்புச் சட்டங்களை) ஏற்படுத்துவதிலேயே அதிகமாக ஆறு நாள்களுக்கு ஒருமுறை ரயில் பயணிகளை அச்சுறுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி ஏற்படுத்திட வேண்டாமா?
ஏழை,எளிய, வெகுமக்களின் போக்குவரத்து ரயில் பயணம்மூலம்தான். எனவே, அதன்மீது ஒன்றிய அரசு போதிய கவனம் செலுத்தவேண்டும்.கவரைப்பேட்டை ரயில் விபத்து ஏற்பட்டபொழுது, தமிழ்நாடு அரசின் உடனடி நடவடிக்கை – விபத்தால் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்ததும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்திய தமிழ்நாடு முதலமைச்சரின் ஆளுமை விதமும் பாராட்டத்தக்கதாகும்!
‘விபத்தில்லா பயணம்’ எப்போது?
சாலைப் பயணம் ‘விபத்தில்லா பயணம்’ Zero Accidents என்ற இலக்குபோல, ரயில் பயணங்களுக்கும் இப்படிப்பட்ட நிலை வராதது ஏன்? என கேட்டு, ‘அந்த நாளும் வந்திடாதோ’ என்று ரயில் பயணிகள் ஏங்குகின்ற ஏக்கம் எப்போது தீரப் போகிறது? ‘ess Luggage, More Comfort’ ‘குறைந்த பயணப் பொதி; நிறைந்த மகிழ்ச்சி’ என்பதுபோல, விபத்தில்லா ரயில் பயணம் விழைவாக இல்லாமல், செயலாகவே மலர வேண்டியது அவசியம், அவசரம்!"என்று கூறியுள்ளார்.