ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில், பா.ஜ.க.வின் கட்சித்தேவைக்காகவே நிதிகள் ஒதுக்கப்படுவதும், கட்சியைப் புறக்கணிக்கும் மாநிலங்களுக்கு அரசு உதவித்தொகைகளில் பாரபட்சம் காண்பிப்பதும் வழக்கமான நடவடிக்கையாகியுள்ளது.
அதன் எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிதி ஒதுக்காமல், நிதிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட பா.ஜ.க, தற்போது அதே நடவடிக்கையை கேரளாவிற்கும் செய்துள்ளது.
நேற்றைய நாள் (அக்டோபர் 1), நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களில் சிக்கிய 21 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு, பா.ஜ.க கூட்டணி ஆட்சி வகிக்கும், மகாராஷ்டிராவிற்கும், ஆந்திரப்பிரதேசத்திற்கும் முறையே ரூ. 1,492 கோடி மற்றும் ரூ. 1,036 கோடி வழங்கிய நிலையில், சுமார் 400க்கும் மேற்பட்டோர் இறக்க நேரிட்ட வயநாடு நிலச்சரிவிற்கு வெறும் ரூ. 145 கோடியே நிதியாக வழங்கியுள்ளது.
வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணிகளுக்கு, தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து உதவிகள் வரப்பெற்றாலும், நிவாரணத் தொகைகள் போதியதாக அமையவில்லை.
ஒட்டுமொத்த கிராமமே நிலச்சரிவில் அழிந்துபோனது, ராகுல் காந்தி நேரில் மீட்புப்பணிகளை பார்வையிட்டார். மீட்புப்பணிகளின் இறுதிகட்டத்தில் கடமைக்காக பிரதமர் மோடியும் பார்வையிட சென்றார்.
இதனைத் தொடர்ந்து, நிலச்சரிவு பாதிப்புகளை சரி செய்ய, சுமார் ரூ. 3,000 கோடி வரை தேவைப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். எனினும், கோரிய தொகையில் பாதியைக் கூட வழங்க பா.ஜ.க முன்வராதது சர்ச்சையாகியுள்ளது.