அரசியல்

“ஆர்.என்.ரவி சனாதனக் கருத்து சொல்வதே யூ டியூப் ஸ்டார் ஆவதற்காகத்தான்” - காட்டமாக விமர்சித்த முரசொலி !

“ஆர்.என்.ரவி சனாதனக் கருத்து சொல்வதே யூ டியூப் ஸ்டார் ஆவதற்காகத்தான்” - காட்டமாக விமர்சித்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (27-09-2024)

ஐரோப்பிய உடையில் சனாதனச் சரக்கு !

மதச்சார்பின்மை என்பது ஐரோப்பியச் சரக்கு என்றும், அது இந்தியாவுக்குத் தேவையில்லை என்றும் மாஜி ஐ.பி.எஸ். அதிகாரியும் இன்றைய சனாதனக் காவலருமான ஆர்.என்.ரவி சொல்லி இருக்கிறார்.

அவர் அணிந்திருக்கும் கோட், சூட் தான் ஐரோப்பியச் சரக்கு என்று மிகச்சரியாகச் சொல்லி இருக்கிறார் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்டா. அது மட்டுமா? ஆர்.என்.ரவி படித்த படிப்பான ஐ.பி.எஸ்ஸும் ஐரோப்பிய சரக்குதான். அவர் இப்போது வகித்து வரும் கவர்னர் பதவியே ஐரோப்பியச் சரக்குதான். கவர்னர், கவர்னர் ஜெனரல் எல்லாம் பிரிட்டிஷாரின் உருவாக்கமே. ஆனால் பிரிட்டிஷார்தான் இந்த நாட்டைக் கெடுத்ததாக மேடைகளில் சொல்லி வருகிறார்.

இவர் சனாதனம் என்று சொல்லி வரும் மனித அடிமைத்தன கருத்துருவாக்கத்துக்கு எதிரான சட்டங்களைக்கொண்டு வந்ததால்தான் பிரிட்டிஷார் மீது இவர்களுக்கு ஆற்றமுடியாத கோபம். ஆட்சியைக் கொடுத்துவிட்டு பிரிட்டிஷார் போன பிறகும் திட்டிக் கொண்டிருக்கக் காரணம், அனைவருக்கும் பொதுவான சட்டத்தை இந்தியாவில் கொண்டு வந்து விட்டார்களே என்பதால்தான்.

“ஆர்.என்.ரவி சனாதனக் கருத்து சொல்வதே யூ டியூப் ஸ்டார் ஆவதற்காகத்தான்” - காட்டமாக விமர்சித்த முரசொலி !

“இந்த நாட்டு மக்களுக்கு ஏராளமான மோசடிகள் நடந்துள்ளது. அதில் ஒன்று மதச்சார்பின்மை என்பது ஆகும். மதச்சார்பின்மை என்றால் என்ன? மதச்சார்பின்மை என்பது ஐரோப்பியக் கருத்து. அது இந்தியக் கருத்து அல்ல. ஐரோப்பாவில் மன்னருக்கும், சர்ச்சுகளுக்கும் இடையில் சண்டை வந்ததால் மதச்சார்பின்மை வந்தது. இந்தியா எப்படி தர்மத்திலிருந்து விலகி நிற்க முடியும்? இந்தியாவில் மதச்சார்பின்மை தேவையில்லை” என்று கன்னியாகுமரியில் சொல்லி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இவர் இப்படிப் பேசியது அரசியலமைப்புச் சட்ட விரோதம் ஆகும்.

அரசியலமைப்புச் சட்டப்படி நடப்பேன் என்று உறுதிமொழி ஏற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அவர், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசுவதே சட்டப்படி குற்றமாகும்.

மதச்சார்பின்மை என்ற கருத்து ஏன் வருகிறது? பல்வேறு மதங்கள் இருப்பதால் வருகிறது. இந்தியாவில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன. அதனால், இங்கு அமையும் அரசானது எந்த மதத்தையும் சாராத அரசாக இருக்க வேண்டும் என்பதால் ‘மதச்சார்பின்மை’ என்ற தத்துவம் தேவைப்படுகிறது. இந்தியாவுக்குத்தான் இந்தத் தத்துவம் தேவை. அதுவும், மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தும் பா.ஜ.க. போன்ற கட்சிகள் இருக்கும் இந்திய நாட்டில்தான் அது மிகமிக அவசியத் தேவையாகும்.

மதங்களிடம் இருந்து அரசு விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் அது உண்மையான, பொதுவான அரசாக இருக்க முடியும். அனைவருக்கும் பொதுவானதாக அரசு இருக்க முடியும். குறிப்பிட்ட மதம் ஆதிக்கம் செலுத்தும் அரசு, அனைவர்க்குமான அரசாக இருக்க முடியாது. குறிப்பிட்ட மதத்தின் அரசாகத்தான் இருக்க முடியும்.

அரசுகளிடம் இருந்து மதங்களும் விலகி இருக்க வேண்டும். அப்போதுதான், அது உண்மையான இறையியல் மதமாக, அது இருக்க முடியும். இல்லாவிட்டால் அரசு, அரசியலின், அதிகாரத்தின், அதிகார வர்க்கத்தின் குணம் மதத்துக்கும் வந்து விடும். மன அடிப்படையிலானது மதம். அது அரசில் ஆட்சி செலுத்த ஆரம்பித்தால் ஆதிக்க மதமாக மாறி விடும்.

எனவேதான் இரண்டையும் பிரித்து வைத்தார்கள் நம்முடைய முன்னோர்கள். ரவி சொல்வது போல இது ஐரோப்பியச் சரக்கல்ல. இந்தியச் சரக்குதான்.

“ஆர்.என்.ரவி சனாதனக் கருத்து சொல்வதே யூ டியூப் ஸ்டார் ஆவதற்காகத்தான்” - காட்டமாக விமர்சித்த முரசொலி !

“நானும் ஓர் சனாதன ஹிந்து” என்று சொல்லிக் கொண்டவர் தான் அண்ணல் காந்தியடிகள். அவரேதான், “வேதங்களுக்கு மட்டுமே தனித்து ஈசுவரத் தன்மை உண்டு என்று நான் கருதுவதில்லை. வேதங்களுக்கு எவ்வளவு ஈசுவரத்தன்மை உண்டோ அவ்வளவு ஈசுவரத் தன்மை கிறிஸ்துவ வேதமாகிய பைபிளுக்கும், முகமதியர் வேதமாகிய குர் ஆனுக்கும், பாரசீகரின் வேதமாகிய ஜெண்டவஸ்தாவுக்கும் உண்டு என்று கருதுபவன் நான்” என்றும் சொன்னார்.

“இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டுமென்று இந்துக்கள் கருதினால் அவர்கள் கனவு காண்பவர்கள் ஆவார்கள். இந்தியாவைத் தங்கள் தாய் நாடாக்கிக் கொண்ட இந்துக்களுக்கும், மகமதியர்களுக்கும், பார்சிகளும், கிறிஸ்தவர்களும் சகோதரர்கள் ஆவார்கள்” என்றவர் அவர். அதனால்தான் தேசத்தந்தை என்று அண்ணல் போற்றப்படுகிறார். ரவிகளின் அடையாளம் என்ன? ஐரோப்பிய உடையில் போலித் தத்துவங்களை விற்பது மட்டும் தான்.

இந்திய நாட்டை குறிப்பிட்ட ஒரு மதப் பெரும்பான்மை வாதத்தின் நாடாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூறு ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. அது நடக்கவில்லை. ஏனென்றால், இந்திய மக்களின் ரத்தத்தில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை உள்ளது. ‘என் கடவுள் எனக்கு, உன் கடவுள் உனக்கு’ என்ற பரந்து பட்ட சிந்தனையானது இந்திய மக்களின் மனதில் உள்ளது. அதனால்தான் 100 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தம் இங்கு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது.

பிரச்சாரத்தின் மூலமாக இதைச் செய்வதில் தோற்றுப்போன பா.ஜ.க. மூதாதையர்கள், இப்போது அரசியல் மூலமாக ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தின் மூலமாக பாசிசத்தை ஆட்சியில் நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள். ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லுக்கு எதிராக கவர்னர் பதவியில் இருந்து கொண்டு பேசுவதை, ‘நிர்வாக நடவடிக்கைகளில் ஒன்றாக’ மாற்றிக் காட்ட நினைக்கிறார் ரவி. அவர் என்னவாக நினைத்துச் சொன்னாலும் தமிழ்நாட்டில் அவர் பேச்சுக்கு அரையணா மரியாதை கூட கிடைக்காது. யூ டியூப்புகளுக்கு அவர் ஒரு நாள் கண்டெண்ட் ஆகலாம்!

அவர் இப்படிப் பேசுவதே யூ டியூப் ஸ்டார் ஆவதற்காகத்தான்.

banner

Related Stories

Related Stories