விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பதிவு செய்த சில கருத்துகள், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படும் வகையில் அமைந்தது.
இதனைப் பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சியினர், கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட உள்ளது என கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு, தி.மு.க சார்பில் ஆ. ராசா, வி.சி.க தலைவர் திருமாவளவன் இது குறித்த சரியான விளக்கம் அளிப்பார். அவரின் ஆலோசனை இல்லாமல் தான், இத்தகைய கருத்துகள் வெளிப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், “திமுக - விசிக இரு கட்சிகளுக்கு இடையில் எந்த சலசலப்பும் இல்லை, விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை. என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான சிறிய வீடியோவில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டார்கள்.
அந்த விவாதம் மேலும் ,மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்திருக்கிறது. அதனால் தி.மு.க - வி.சி.க இடையில் எந்த சிக்கலும் இல்லை, எந்த சிக்கலும் எழாது” என்றார்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் மீது நடவடிக்கை இருக்குமா என்ற கேள்விக்கு, உட்கட்சியில் உள்ள முன்னணி தோழர்களோடு கலந்து பேசி தான் எந்த நடவடிக்கையும் இருக்கும் எனவும், கட்சி விவகாரங்களை முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர் உயர்நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களுடன் இது குறித்து தொலைபேசி மூலமாக பேசியிருக்கிறேன் எனவும், மீண்டும் அவர்களுடன் கலந்து பேசி அது தொடர்பான முடிவுகளை எடுப்போம் என்று தெரிவித்தார்.