தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை விவரம்.
தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலைச் செய்ய இயலாதபடி, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஏற்படும் தடைகளும், சோதனைகளும், வேதனைகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சோகக் காட்சிகளாகவும், சொல்லொணா துயர தொடர் கதைகளாகவும் தொடர்ந்து கொண்டே உள்ளன!
அன்றாட அவலங்களாகதொடர்ந்துகொண்டே உள்ளன
கடல்மேல் சென்று, தங்களது உயிரைப் பணயம் வைத்து வாழும் அவர்கள், இலங்கைக் கடற்படையாலும், அந்நாட்டு அரசு சட்ட நடவடிக்கையைக் காட்டியும், நமது மீனவர்களைக் கடலில் தாக்குதல், வலைகளைப் பறித்தல், இலங்கை சிறையில் அடைத்தல், படகுகளைப் பறிமுதல் செய்தல், கொடுமையான அபராதங்களை விதித்து, அவர்களை, அத்தொழிலை செய்ய முடியாது முடமாக்கும் ஈவிரக்கமற்ற செயற்பாடுகள் – இவை அன்றாட அவலங்களாக தொடர்ந்துகொண்டே உள்ளன.
நமது முதலமைச்சர் எந்தெந்த வகையில் எல்லாம் அவ்வப்போது கடிதங்கள், மற்ற நடவடிக்கைகள்மூலம் ஒன்றிய அரசுக்கு, குறிப்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்துடனும் தொடர்புகொண்டு இதற்கு விடியல் காண விழைவதில் விடா முயற்சியில் ஈடுபட்டாலும், இதற்கு ஒரு நிரந்தரப் பரிகாரம் காணவேண்டிய ஒன்றிய அரசு, தனது அழுத்தமான எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவிர்த்தும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வினைக் காணவும் ஏனோ உளப்பூர்வ உறுதியுடன் செயல்படாத நிலையே யதார்த்தமாக உள்ளது!
நமது மீனவர்களின் தலையை மொட்டை அடித்து அவமானப்படுத்தியுள்ளது இலங்கை அரசு!
அண்மையில், நமது மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் வழமைகளைத்தாண்டி, மேலும் கொடுமையாக அவர்களது தலையை மொட்டை அடித்து அவமானப்படுத்தும் மனிதநேயமற்றச் செயலையும் இலங்கை அரசு செய்துள்ளது!
நமது ஒன்றிய அரசு, இதற்குத் தனது கடுமையான கண்டனத்தை இலங்கை அரசுக்குத் தெரிவித்து இருக்கவேண்டாமா?
‘‘யாருக்கோ வந்தது இந்த நிகழ்வு’’ என்பதுபோல இருக்கக்கூடாது ஒன்றிய அரசு.
கடலில் எல்லைச் சுவரா கட்ட முடியும்?
மீனவர்கள் கடலில் மீன் பிடித் தொழில் செய்கையில், அவர்கள் எல்லை தாண்டினார்கள் என்பதா? இயற்கையாகக் காற்றடித்து படகுகள் செல்வது இயல்பாக ஏற்படுவதுதானே!
நிலப் பகுதியில் எல்லையைக் காக்க முள்வேலிகளோ, தடுப்புச் சுவர்களோ பல நாட்டு எல்லைகளில் போடுவதைப்போல, கடலில் எல்லைச் சுவரா கட்ட முடியும்?
ஒன்றிய இணையமைச்சர் ஒருவர், ‘‘தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பல பாதுகாப்பு கருவிகளைத் தந்துள்ளோம்’’ என்று ஏதோ விளக்கெண்ணெய்க்கு விளக்கம் தந்து, அரசியல் தூண்டிலைத் தூக்கிக் காட்டுவதுதான் சரியான பரிகாரமா? நிரந்தரத் தீர்வா?
எனது தலைமையில், அக்.1 இல் நாகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பெருந்திரள் கூட்டம்!
இதனைக் கண்டித்து, நமது மீனவர்கள் வாழ்வுரிமைப் பிரச்சினையைக் காக்கும் வகையில், ஒன்றிய அரசை வலியுறுத்தி, ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பெருந்திரள் பரப்புரைக் கூட்டம், நாகையில், எனது
(கி.வீரமணி) தலைமையில் 1.10.2024 அன்று மாலை 4 மணிக்குத் தொடங்கி, இரவு எட்டு மணிவரை நடைபெற, நாகை மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்கின்றனர்!
தி.மு.க. முதல் அத்துணைத் தோழமைக் கூட்டணி கட்சிகளின் முக்கிய பொறுப்பாளர்கள், அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியவர்கள் உள்பட அனைவரும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்!
அண்டை மாவட்டங்களில் உள்ள கழகத்தவர்கள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சி மீனவ சகோதரர்கள் அனைவரும் கலந்துகொண்டு அந்த ஆர்ப்பாட்டத்தை வரலாறாக்கிட ஒத்துழைக்கவேண்டும் என்பது நமது முக்கிய வேண்டுகோளாகும்!
வாதாடிய கட்டம் தாண்டி, போராட்ட களத்திற்குச் சென்று, ஒன்றிய அரசின் அலட்சியப் பார்வைக்கு முற்றுப்புள்ளி வைக்க – அழுத்தத்தை நாம் நாடு தழுவிய அளவில் ஏற்படுத்தி, மீனவர்களின் வாழ்வாதாரத்தினை அச்சத்திற்கும், அவலத்திற்கும் உரியதாக்கும் நிலையை மாற்றிட, இது ஒரு தொடக்கம் – தொடர் நடவடிக்கைகளில் தேவைப்பட்டால் ஈடுபடுவதுபற்றி கலந்தாலோசித்து முடிவெடுப்போம்!
கச்சத்தீவு மீட்புக்கு ஒன்றிய பா.ஜ.க. எடுத்த நடவடிக்கை என்ன?
கச்சத்தீவுபற்றி தேர்தலில் நீட்டி முழங்கி, தி.மு.க.மீது பழிபோட்ட பிரதமரும், பா.ஜ.க.வும் அதன் மீட்புக்கு எடுத்த நடவடிக்கை என்ன என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாகும்! மக்கள் மன்றத்தைத் தட்டி எழுப்பி, புதிய தீர்வைக் காணவேண்டியது அவசியம், அவசரம்!