ஒன்றிய பாஜக அரசு தங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது. அந்த வகையில் அமலாக்கத்துறை மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைத்தது.
கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக ஜாமின் கூட கிடைக்க விடாடல் அவரை சிறையில் வைத்திருந்தது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அவருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்த நிலையில், அவர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது. அந்த வழக்கில் ஜாமின் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவந்தார். அவரை ஏராளமான ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் கூடி வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ”என் வாழ்வில் பல சிரமங்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனாலும் நான் சோர்ந்து போனது இல்லை. ஏனென்றால் நான் நேர்மையாக இருந்திருக்கிறேன். முன்பை விட என்னுடைய தைரியமும், நம்பிக்கையும் இப்போது 100 மடங்கு அதிகரித்திருக்கிறது.
அவர்களின் (பாஜக) சிறைச் சுவர்கள் என்னுடைய தைரியத்தைப் பலவீனப்படுத்த முடியாது. எனக்கு சரியான பாதையைக் காட்ட இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நாட்டைப் பலவீனப்படுத்தவும், பிளவுபடுத்தவும் முயற்சிக்கும் அனைத்து சக்திகளுக்கும் எதிராகத் தொடர்ந்து நான் போராடுவேன்” என்று கொட்டும் மழையிலும் கர்ஜித்தார்.