மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்தவே புள்ளியியல் நிலைக்குழு கலைக்கப்பட்டதா? என ஒன்றிய பாஜக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான வைகோ அறிக்கை வாயிலாக கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கை வருமாறு :
மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யும் முறை, மாதிரி வடிவமைப்பு, கணக்கெடுப்புக்கான கருவிகள் உள்ளிட்டவை குறித்து ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொருளாதார நிபுணரும், முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணருமான பிரணாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட புள்ளியியல் நிலைக்குழுவை (Standing Committee on Statistics -SCoS) ஒன்றிய பாஜக அரசு கடந்தாண்டு ,2023 ஜூலை 13 ஆம் தேதி மாதம் அமைத்தது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) அனைத்து புள்ளிவிவர ஆய்வுகளையும் மேற்பார்வையிட அமைக்கப்பட்ட புள்ளியியல் நிலைக்குழுவை ஒன்றிய அரசு கலைத்திருக்கிறது. குழுவை கலைப்பதாக உறுப்பினர்களுக்கு தேசிய மாதிரி ஆய்வுகள் துறையின் இயக்குநர் கீதா சிங் ரத்தோர் அனுப்பிய மின்னஞ்சலில், “மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வழிநடத்தல் குழு மற்றும் நிலைக்குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் ஒன்றோடு ஒன்று முரண்படுவதால், நிலைக்குழுவை கலைக்க அமைச்சகம் முடிவெடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரக் கணக்கெடுப்பில் தாமதம் மற்றும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாமதம் குறித்து முந்தைய கூட்டங்களில் விவாதங்கள் நடைபெற்றதாகவும், அது நிலைக் குழுவைக் கலைக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் புள்ளியியல் நிலைக்குழுவின் (எஸ்சிஓஎஸ்) உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
புள்ளியியல் நிலைக்குழு தலைவரும், இந்தியாவின் முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணருமான பிரணாப் சென்,“ புள்ளியியல் நிலைக்குழு கலைக்கப்பட்டதற்கானக் காரணத்தை அமைச்சகம் குறிப்பிடவில்லை. அவர்கள் ஒரு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “தரவுகளின் முக்கிய ஆதாரமான மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் இன்னும் நடத்தப்படவில்லை” என்று கூட்ட ங்களில் தாங்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முறையான காரணமின்றி நிலைக்குழுவின் உறுப்பினர்களுக்குகூட தகவல் அளிக்காமல், அந்த குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது. புள்ளியியல் நிலைக் குழுவின் தலைவரிடம் கூட கலந்து ஆலோசனை மேற்கொள்ளாமல் திடீரென்று குழுவை ஒன்றிய அரசு கலைத்திருப்பது ஐயப்பாடுகளை ஏற்படுத்துகிறது. 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மூன்றாண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டுள்ளதால் மக்களுக்கான நலவாழ்வு திட்டங்கள் செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலமே இந்த ஆட்சியின்போது ஏற்பட்ட கல்வி வளர்ச்சி தெரியவரும். அதுமட்டுமின்றி பல்வேறு நலத்திட்டங்களுக்கும் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்துதான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மிகவும் முக்கியமாக அடுத்து செய்யப்படவிருக்கும் தொகுதி மறு சீரமைப்பு 2021 சென்சஸ் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும்.
சமூக நீதியை முறையாக செயல்படுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில் ஒன்றிய அரசு புள்ளியியல் நிலைக் குழுவை கலைத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் தாமதமாகும் சூழலை திட்டமிட்டே ஏற்படுத்தி வருவது ஏற்கத்தக்கதல்ல. ஒன்றிய அரசு உடனடியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.