மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
அதோடு மட்டுமின்றி பாஜக மற்றும் அதனை எதிர்க்கும் பொதுமக்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் வழக்கம் பாஜக ஆளும் மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் தொடங்கிய இந்த நடைமுறை பாஜக ஆளும் மாநிலங்களிலும் பரவியது. இதுவரை ஏராளமான இஸ்லாமியர்களின் வீடுகள் இதுபோன்ற புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜக அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், "எப்படி ஒருவர் குற்றவாளி என்பதால் அவரது வீடு இடிக்கப்படலாம். அவரின் வீடு இதில் ஏன் சம்மந்தப்பட்டது. கட்டடம் அனுமதியற்றதாக இருந்தால் இடிக்கப்படலாம். ஆனால் அதற்கு நெறிமுறைகள் தேவை"என்று கூறினர்.
மேலும், "ஒரு கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன்னர் நோட்டீஸ் அளித்து, அதற்குப் பதிலளிக்க அவகாசம் கொடுங்கள். சட்டப் பூர்வ தீர்வுகளைத் தேட நேரம் கொடுங்கள் அதன்பிறகு இடிக்கலாம். இடிப்பதற்கு முன் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒருவரின் தவறுக்காக வீடு இடிக்கப்படுவது சரியான அணுகுமுறை அல்ல. ஒரு குடும்பத்தில் ஒருவர் செய்யும் தவற்றுக்காக எப்படி மொத்த குடும்பத்தையும் அரசு தண்டிக்க முடியும். இது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் வெளியிடுவோம்"என்று கூறினர்.