கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்றது. அதே நேரம் பாஜகவினர் பல இடங்களில் வாக்குமையங்களை கைப்பற்றி கள்ளஓட்டு போட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.
இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்காமல் இருந்தது. இந்த நிலையில், தாங்கள் கள்ளஓட்டு போட்டு பாஜக வேட்பாளரை வெற்றிபெற வைத்ததாக பாஜகவினரே கூறும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதேச மாநிலம் சாகர் மக்களவை தொகுதி பா.ஜ.க எம்.பி. லதா வாங்கடே என்பவர் அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது அவரிடம் அருகில் நின்ற பா.ஜ.க கவுன்சிலரின் கணவர் மகேஷ் என்பவர், "நாங்கள் 13 வாக்குச்சாவடிக்குள் காங்கிரஸ் பூத் ஏஜெண்ட்கள் யாரையும் விட வில்லை, நான் மட்டும் 15 ஓட்டுப்போட்டேன்" எனக் கூறினார்.
ஊடகங்கள் மத்தியில் தனது கட்சியை சேர்ந்த ஒருவரே இப்படி கூறியதால் அதிர்ச்சி அடைந்த பாஜக எம்.பி ஏதும் பதில் பேச முடியாமல் அமைதியாக அங்கிருந்து சென்றார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்த நிலையில், அது இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாஜகவினரே கள்ளஓட்டு குறித்து பேசிய நிலையில், இந்த வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனில் முறையிடப்போவதாவும், இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.