ஒன்றிய அரசின் ரயில்வே துறையில் அஸ்வினி வைஷ்ணவ் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே நீடிக்கிறது.
உலக அளவில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தும், ரயில் விபத்துகளை தடுக்கும் தொழில்நுட்பங்களை பல நாடுகள் நடைமுறைக்கு கொண்டு வந்தும், இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மட்டும் சில ஆண்டுகள் பின்னோக்கியதாகவே இருக்கிறது.
இதனை மக்களவையில் எதிர்க்கட்சியினர் கண்டனமாக முன்வைத்தபோது கூட, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சிறு சிறு தவறுகளை அரசியலாக்க வேண்டாம் என்றார். இது தேசிய அளவில் மிகப்பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
இந்நிலையில் கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த கிசான் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு துண்டிப்படைந்து, இரண்டு வண்டிகளானது.
தற்போது பீகாரிலும் சரக்கு ரயில் பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு துண்டிப்படைந்து, சில ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.
இது குறித்து காங்கிரஸ் கட்சி, தனது X தளத்தில், “ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில், ரயில் விபத்துகள் இயல்பான நிகழ்வாக மாறியுள்ளது. நேற்று உத்தரப் பிரதேசம், இன்று பீகார் என ரயில் விபத்துகள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. எனினும், இது ஒன்றிய அமைச்சரை பொறுத்தவரை, இவை சிறிய தவறுகளாகவே இருக்கிறது” என கண்டனம் தெரிவித்துள்ளது.