நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்து. இதனால் அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த கூட்டணியே தற்போது ஆட்சியமைக்கும் சூழலில் அவர்கள் பாஜகவை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்த நிலையில், பாஜக மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வந்தது.
பாஜக நாடாளுமன்றத்தில் கொண்டுவரும் திட்டங்களுக்கு கூட சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் ஆதரவு கொடுத்தால் மட்டுமே நிறைவேறும் சூழல் நிலவுகிறது. அந்த வகையில் வஃக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்தது. ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக அது நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில், வஃக்பு வாரிய சட்டத் திருத்த சட்டத்துக்கு முதலில் ஆதரவு தெரிவித்த நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவர் சஞ்சய் ஜா, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான் ஆகியோர் ஒன்றிய அமைச்சர் கிரிண் ரிஜிஜுவை சந்தித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இதனால் அந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத சிக்கலில் பாஜக சிக்கியுள்ளது. ஏற்கனவே உயரதிகாரிகள் நியமனத்தில் லேட்டரல் என்ட்ரி முறையை பாஜக கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது வஃக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.