பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த மல்யுத்த போட்டியில் 50 கிலோ மகளிர் எடை பிடியில் இந்திய வீரர் வினேஷ் போகத் கலந்துகொண்டார். அதில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் வினேஷ் போகத் சர்வதேச போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியன், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டார்.
இதில் முதலில் பின்னடைவில் இருந்த அவர் கடைசி 20 நொடிகளில் அபாரமாக செயல்பட்டு இதுவரை எந்த போட்டியிலும் தோற்கடிக்கப்படாமல் இருந்த யூ சுசாகியை வீழ்த்தினார்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் உலகின் 7-ம் நம்பர் வீராங்கனையான உக்ரைனின் ஒல்ஸானா லிவாச்சை வீழ்த்தி வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பின்னர் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கியூபாவின் கஸ்மான் லோபசை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் மல்யுத்தத்தில் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் அவர் தங்கம் அல்லது வெள்ளி வெல்வது உறுதியான நிலையில், 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிக எடை இருந்ததாக கூறப்பட்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
மேலும், வீரர்கள் உடை எடை குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவ நிபுணர்கள் சரியான வழிகாட்டுதலை வழங்கவில்லை என்றும் விமர்சனம் எழுந்தது. மேலும், வினேஸ் போகத் எடை பிரச்னையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் உரிய நேரத்தில் மேல் முறையீடு செய்யவில்லை என்றும், விமர்சனங்கள் எழுந்த பின்னரே மேல்முறையீடு செய்யப்பட்டது என்ற புகார்களும் எழுந்தது.
இந்த நிலையில், வினேஷ்போகத் எடை விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி உஷா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேட்டியளித்த அவர், "மல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை மற்றும் ஜூடோ போன்ற விளையாட்டுகளில் உள்ள விளையாட்டு வீரர்களின் எடை மேலாண்மை பொறுப்பு ஒவ்வொரு தடகள வீரர் மற்றும் அவரது பயிற்சியாளரின் பொறுப்பு.
அதற்கு ஒலிம்பிக் சங்கமோ, அவர்களால் நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளோ பொறுப்பேற்காது. மருத்துவக் குழுவினர் மீதான விமர்சனத்தை ஏற்க முடியாது. அத்தகைய விமர்சனத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம்" என்று கூறியுள்ளார். வினேஷ் போகத் விவகாரத்தில் இன்று மேல்முறையீட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பொறுப்பை தட்டிகழிக்கும் விதமாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி உஷா கூறியுள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.