அரசியல்

"இப்படி எல்லாம் பேசுபவர்கள் என்ன குரூரமான ஜாதி வகை?" - பாஜக தலைவர்களை குறிப்பிட்டு முரசொலி விமர்சனம் !

"இப்படி எல்லாம் பேசுபவர்கள் என்ன குரூரமான ஜாதி வகை?" - பாஜக தலைவர்களை குறிப்பிட்டு முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (03-08-2024)

இவர்கள் எல்லாம் என்ன ஜாதி ?

அனுராக் தாக்கூர் பேசியது அதிர்ச்சி அளிக்கவில்லை. மோடியின் சிஷ்யர் அப்படிப் பேசாமல் இருந்தால்தான் அதிர்ச்சிக்குரியதாக இருக்கும். சோனியா காந்தியை 'ஜெர்சி பசு' என்றும், ராகுலை ‘கலப்பினக் கன்று' என்றும் ஒரு காலத்தில் கிண்டல் அடித்தவர்தான் பிரதமர் மோடி என்பதை நாடு மறந்திருக்காது. அவரது வாரிசு தான் நான் என்பதை அனுராக் தாக்கூர் நிரூபிக்கிறார். இழந்துபோன அமைச்சர் பதவியை மீட்டெடுக்கவும் இத்தகைய குரூர தந்திரத்தை அனுராக் பயன்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் நாடாளுமன்றத்துக்கு மாபெரும் களங்கம் இது.

கடந்த ஜூலை 30 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அனுராக் தாக்கூர், ‘ராகுலை ஜாதி தெரியாதவர்” என்ற பொருளில் சொல்லி இருக்கிறார். இவர் தான் ஐந்தாண்டு காலம் அமைச்சராக இருந்தவராம். கேவலம். அதைவிட மோசமானது என்ன என்றால், இந்த உரையை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி, “மிகச் சிறந்த உரை” என்று பட்டயம் கொடுத்துள்ளார். தன்னால் சொல்ல முடியாததை அவர் சொல்லி விட்டார் என்ற மகிழ்ச்சியா இது? மக்கள் கொடுத்த தோல்வி இவர்களை எந்தளவுக்கு நிலை குலைய வைத்துள்ளது என்பதன் அடையாளம் இது. அனுராக் தாக்கூரின் உரையை பிரதமர் வெளியிட்டதைக் குறிப்பிட்டு, அவருக்கு எதிராக உரிமைமீறல் பிரச்சினை கொடுத்திருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் எம்.பி.யான சரண்ஜித் சிங் சன்னி, சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். “மக்களவை நடைமுறைகள், அலுவல் நடத்தை விதி எண் 222 இன் கீழ் இது தவறானது ஆகும்.

"இப்படி எல்லாம் பேசுபவர்கள் என்ன குரூரமான ஜாதி வகை?" - பாஜக தலைவர்களை குறிப்பிட்டு முரசொலி விமர்சனம் !

அனுராக் தாக்கூரின் கருத்துகள் அவைத்தலைவரால் நீக்கப்பட்டன. ஆனால் முழுக் காணொலியையும் எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அந்தக் காணொலியில் அவைத்தலைவரால் நீக்கப்பட்ட கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. பிரதமரின் இந்தச் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. அவையில் நீக்கப்பட்ட கருத்துகளை வெளியிடுவது உரிமைமீறல் ஆகும். அவைக்கு அவமதிப்பாகும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை அவமதிப்பதைப் பற்றி எல்லாம் பா.ஜ.க.வுக்கு எந்தக் கவலையும் இல்லை. இப்படி எடுப்பதாக இருந்தால் தொடர்ச்சியாக உரிமை மீறலைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், “அனுராக் தாக்கூர் பேசியதில் என்ன தவறு?” என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேட்டிருப்பதுதான். “ராகுல் காந்தியின் ஜாதியைக் கேட்பதில் என்ன தவறு?” என்று கேட்கிறார் அவர். அனுராக் தாக்கூர், ராகுல் காந்தியின் ஜாதி என்ன என்று கேட்கவில்லை. 'ராகுல்காந்தி ஜாதி தெரியாதவர்' என்ற பொருளில் சொல்லி இருக்கிறார். 'என்ன ஜாதி' என்று கேட்பது வேறு, 'உனக்கு உன் ஜாதியே தெரியாது' என்று சொல்வது வேறு. நாடாளுமன்றத்தில், ராகுல் காந்தியைப் பார்த்து இக்கேள்வியைக் கேட்ட அனுராக் தாக்கூர், யாராவது ஒரு தனி மனிதரிடம் ரோட்டில் கேட்கச் சொல்லுங்கள். அப்போதுதான் அவர் கேட்ட கேள்வியின் உண்மையான பொருளை உணரமுடியும். அது ஒரு இழிவுபடுத்தும் பொருளைக் கொண்டது என்பதை அப்போதுதான் உணர முடியும். ஜாதியைப் பெருமையாகவும், பெருமிதமாகவும், கர்வமாகவும், ஆணவமாகவும் நினைக்கும் ஒருவரால்தான் இது போன்ற கேள்வியைக் கேட்க முடியும்.

"ஜாதியற்றவராக வாழ்வதுதான் பெருமையே தவிர, ஜாதி கேட்பது பெருமையல்ல” என்று நாடாளுமன்றத்தில் உணர்த்தி இருக்கிறார் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி. இதெல்லாம் ஜாதி ஜடங்களுக்கு எங்கே புரியப் போகிறது? பெரியார் சொன்னார், “ஜாதியைக் கூட ஒழித்துவிடலாம், ஜாதிப் பெருமையை ஒழிக்க முடியாது” என்று. ஜாதியைப் பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பவர்களை, அதை நாடாளுமன்றத்திலேயே காட்டிக் கொள்பவர்களை, எந்தப் பட்டியலில் சேர்ப்பது? இப்படி எல்லாம் பேசுபவர்கள் என்ன குரூரமான ஜாதி வகை?

"இப்படி எல்லாம் பேசுபவர்கள் என்ன குரூரமான ஜாதி வகை?" - பாஜக தலைவர்களை குறிப்பிட்டு முரசொலி விமர்சனம் !

இந்திய அரசியலமைப்புச் சட்ட அவையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை மிகமிக முக்கியமானது. “1950 ஜனவரி 26 ஆம் நாள் நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம். சமூகப் பொருளாதார வாழ்வில் ஏற்றத்தாழ்வைப் பெற்றிருப்போம். அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒவ்வொரு வாக்குக்கும் ஒவ்வொரு மதிப்பு என்றிருக்கும். நமது சமூக பொருளாதார வாழ்விலோ 'ஒரு மனிதன் ஒரு மதிப்பு' என்ற கோட்பாட்டை தொடர்ந்து நிராகரிப்பவர்களாக இருப்போம். எவ்வளவு காலத்துக்கு இந்த முரண்பட்ட வாழ்வை வாழப் போகிறோம்?” என்று கேட்டார் அண்ணல்.

சமூக, பொருளாதாரத்தில் மட்டுமல்ல; அரசியலிலும் 'ஒரு மனிதன் ஒரு மதிப்பு' கோட்பாடு இன்னமும் வரவில்லை, வர விடமாட்டார்கள் என்பதையே அனுராக் தாக்கூர் போன்றவர்களின் பேச்சும், அதை வழிமொழியும் பிரதமர் மோடியின் செயலும் காட்டுகின்றன. “இந்த அவை தமக்கு அளிக்கப்பட்டுள்ள இறையாண்மை மிக்க அதிகாரத்தை அறிவார்ந்த முறையில் பயன்படுத்தும் என்பதை நாம் நமது நடத்தையின் மூலம் நிரூபிப்போம்” என்றார் அண்ணல் அம்பேத்கர். “ம்கூம்! அப்படி ஆக விடமாட்டோம்” என்பதை அனுராக் தாக்கூர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories