அரசியல்

மாநில உரிமைகளை மீறும் CBI-யின் செயல் கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானதே - கி.வீரமணி அறிக்கை !

மாநில உரிமைகளை மீறும் CBI-யின் செயல் கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானதே - கி.வீரமணி அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த வழக்கில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சி.பி.அய். விசாரணை மேற்கொண்டது குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வின் கருத்து சரியானதே, என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :

உச்சநீதிமன்ற அமர்வின் கருத்து சரியானதே, வரவேற்கத்தக்கதே!

மேற்கு வங்க மாநில அரசு தாக்கல் செய்த ஒரு வழக்கில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், ஒரு மாநிலத்தில் சி.பி.அய். விசாரணை நடத்த ஒன்றிய அரசு முயலுவது – கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில உரிமைக்கும் எதிரானது என்று – உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்த கருத்தை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த ஒரு வழக்கு நீதிபதிகள் ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய், ஜஸ்டிஸ் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வின்முன் 10.7.2024 அன்று விசாரணைக்கு வந்தது.

மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த வழக்கில் – சி.பி.அய். என்ற அமைப்புதான் மேற்கு வங்கத்தில் வழக்கு விசாரணையைத் தொடங்கி நடத்தவேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக, சி.பி.அய். என்ற அமைப்பு முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் ஒன்று என்றும் – ஏற்கெனவே மாநில அரசின் அனுமதியின்றி ஒரு மாநிலத்தில் அவர்கள் விசாரணை நடத்த முனைய அதிகாரம் இல்லை; மாநிலத்தில் விசாரணை நடத்த அந்த மாநிலத்தின் ஒப்புதல் இன்றியமையாதது – என்று மாநில அரசு வாதிட்டது. காலங்காலமாய் நிலவி வந்த அரசமைப்புச் சட்டப்படிக்கான மாநில உரிமைகளைப் பறிப்பதாகும் என்பதே இந்த வழக்கின் மய்யக் கருத்தாகும்!

கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானது!

இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது என்பதே முக்கியம் – குறிப்பிட்ட வழக்கில்கூட!

இதுபற்றி விசாரணை நடத்திய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில், மூத்த நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் தெளிவாக சில முக்கிய சட்ட விளக்கங்களை எடுத்துரைத்துள்ளார்.

1. சி.பி.அய். என்பது மேற்கு வங்கம் கூறுவதுபோல், ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் ஒரு தனி அமைப்பு – அது தன்னிச்சையாக, சுதந்திரத்துடன் செயல்படாத வகையில் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட அதன்கீழ் இயங்கும் ஓர் அமைப்பே என்று கூறியுள்ளார்!

2. சி.பி.அய். என்பது ஒன்றிய அரசால் ஏற்படுத்தப்பட்டு, கண்காணிப்பு, மேற்பார்வை எல்லாம் உள்பட இயங்கும் ஓர் அமைப்புதானே தவிர, வேறில்லை.

எதற்கெடுத்தாலும் 'சி.பி.அய். கூப்பாடா?'

3. மாநில அரசுகள் ஒப்புதலுக்குப் பிறகே மாநில வழக்குகளை அது விசாரணைக்கு உட்படுத்த முடியும் என்பது (DS PE CACL) படியே உள்ள மாநில உரிமையாகும். எனவே, மாநில அரசின் முன் அனுமதி பெறாமல், அது தனது விசாரணையைத் தொடங்க முடியாது என்பது கோடிட்டுக் காட்டப்படவேண்டிய சட்ட நிலையாகும்.

காரணம், இது மாநிலங்களின் உரிமை என்ற கூட்டாட்சிபற்றிய அரசமைப்புச் சட்ட அவைகளுக்கு கிடைத்துள்ள உரிமைகள் பாதுகாப்பு ஆகும்!

– இந்த காலகட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியின் கருத்து ஒரு முக்கிய – கண்மூடியபடி கருத்துக் கூறுவோருக்குத் தக்க பாடமாக உள்ளது!

இப்போது அரசியலில் ஒரு வேடிக்கை – எதற்கெடுத்தாலும், எங்கே எது நடந்தாலும், அந்த மாநில காவல்துறை, புலன் விசாரணை அமைப்புகள் ஏதோ செயல்திறனற்ற ஓர் அமைப்புபோன்று விமர்சிப்பது – அது எதிர்க்கட்சிகளுக்கும் மற்ற சில கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் அரசியல் பசி தீர்க்கும் தீனியாகப் பயன்பட்டாலும், கொள்கை ரீதியாக அது எப்படி மோசமான ஒரு கோரிக்கை என்பதை ஆழமாக சிந்திக்கும் எவருக்கும் தெளிவாக விளங்கும்.

1. இதன்மூலம் மாநில காவல்துறையின் திறமையைக் கொச்சைப்படுத்தி, கீழமைக்குக் கொண்டு செல்லும் அவலம் ஏற்படுகிறது!

(எங்கோ சில சில இடங்களில் அதிகாரத் தவறுகள் நடைபெற்றிருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த மாநில காவல்துறையையே களங்கப்படுத்திடலாமா? அரும்பாடுபட்டு, தங்கள் உயிரைப் பணயம் வைத்து, இரவு – பகல் பார்க்காமல் கடமையாற்றும் காவல்துறை அதிகாரிகளை, காவல்துறையை இது கறைபடியச் செய்யாதா?

மாநில உரிமைகளை மீறும் CBI-யின் செயல் கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானதே - கி.வீரமணி அறிக்கை !

மாநிலப் பணியிலிருந்து சென்றவர்கள்தானே சி.பி.அய். அதிகாரிகள்?

2. சி.பி.அய். அதிகாரிகள் என்ன தனியாகவா நியமனம் பெற்று வருகிறார்கள்? மாநிலக் காவல்துறையிலிருந்துதானே அங்கே செல்லுகிறார்கள்; பிறகு திரும்ப மறுபடியும் மாநிலப் பணிக்கே திரும்புகிறார்கள். பின், ஏன் இந்த அவசரக் கோல அள்ளித் தெளிப்பு?மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக ஒன்றைக் கேட்டார்.

‘‘சி.பி.அய். அதிகாரிகள் என்ன வானத்திலிருந்து பொத்தென்று குதித்தவர்களா?‘‘ என்று! இப்படிக் கூறுவது சற்றுக் கடுமையான சொற்களாக இருந்தாலும், அதன் அடிப்படைக் கருத்தை மறுக்க முடியுமா?

அவரது சொற்கள் வேண்டுமானால் ஏற்க முடியாததாக இருக்கலாம்; உண்மை அதுதானே! மாநில காவல்துறையிலிருந்துதானே தேர்வு செய்யப்பட்டுச் செல்கிறார்கள். அங்கேயே என்ன நடந்தது என்பது சில ஆண்டுகளுக்குப் பின் மோடி அரசில் விவாதிக்கப்படவில்லையா?

அதைத்தான் மேலே நாம் சொன்னோம்.அதையெல்லாம்விட, தற்கால சந்தர்ப்பவாத (Expediency) – இப்படி கோரிக்கை வைக்கும் எதிர்க்கட்சிகளின் முந்தைய சரித்திரம் – கூற்று மறந்து போகுமா?

ஆளும் கட்சியாகிவிட்டால் இந்தக் கோரிக்கையை வைப்பார்களா?

நாளைக்கு மாநில அரசு எதிர்க்கட்சிகளை இவ்வாறு நடத்திடும் நிலை வந்தால், இதே நிலைப்பாட்டுக்கு எதிர்நிலை எடுக்காமல் இருப்பார்களா?

பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் 121 பேரின் உயிரைப் பலி வாங்கிய ஒரு சாமியார் வழக்கில் சி.பி.அய். விசாரணையை அரைவேக்காடு அண்ணாமலை கோருவாரா?

பல வழக்குகளில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சி.பி.அய். விசாரணையை ஏற்காத கட்டங்களும், நிகழ்வுகளும் மறந்துவிட்டதா?

பல மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பெரிய சிக்கல் நிறைந்த வழக்குகளுக்கு அதைக் கோரினால், அதில் பொருள் உண்டு. எடுத்ததெற்கெல்லாம் சி.பி.அய். விசாரணை என்று கோரினால், கீறல் விழுந்த கிராமஃபோன் தட்டுக் குரல் போல் தேவையா?

மாநில உரிமை முக்கியம் அல்லவா!

மாநில உரிமைகளைப் பெருக்கி, விரிக்க வற்புறுத்தும் பல தலைவர்களே கூட, ''சி.பி.அய். விசாரணை தேவை'' என்று அடிக்கடி கூறுவது ஏற்கத்தக்கதல்ல – அரசமைப்புச் சட்டப்படி சுயமுரண்பாடும் ஆகும்!

தற்காலிக லாபத்தை எண்ணி, நிரந்தர முதலீடு காலியாவதற்கு துணை போகவேண்டாம் என்பதே நமது கருத்து!

Expediency என்ற சந்தர்ப்பவாதமாகவே முடியும்!

banner

Related Stories

Related Stories