விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, உடல்நலக்குறைவால் ஏப். 6 ஆம் தேதி காலமானார். இவரது மறைவு குறித்து சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது.
இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கிய நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தோல்வி பயத்தில் அதிமுக இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், பாஜக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றார். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டது. அதிலும் திமுக வேட்பாளரே முன்னிலை பெற்று வருகிறார்.
சமீபத்தில், நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் , திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 15, 346 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். அவர் 24,171 வாக்குகளும், பாமக வேட்பாளர் 8,825 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.