நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. தொடர்ந்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்தது.
இது குறித்து தற்போது வரை 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவி அத்ரி என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் கேள்வித்தாள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து கசிந்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பிகார் மாநிலத்தில் எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட கேள்வித்தாள்களை தடைய அறிவியல் சோதனைக்கு உட்பட்டதில் 68 கேள்விகள் உண்மையான கேள்வித்தாளுடன் ஒத்துப் போவதாக பிஹார் போலீசார் கண்டறிந்துள்ளனர். இதனால் அந்த மையத்தில் இருந்து கேள்வித்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் நீட் முறைகேடு விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதை ஒன்றிய அரசே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. அது தவிர நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 63 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்துள்ளது.
மேலும், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தேசிய தேர்வு முகமை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவித்தார். இப்படி நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமானப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
நீட் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், "நடைபெற்று முடிந்த நீட் தேர்வை மொத்தமாக ரத்து செய்ய முடியாது. தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த தேர்வில் முறைகேடுகள் பெரிய அளவில் நடைபெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை" என்று ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்குதல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.