சிலந்தி பதில்கள் :
கேள்வி : சென்ற முறை நாடாளுமன்றத்தின் படிக்கட்டுகளை வணங்கிய மோடி இந்த முறை அரசியல் சட்டப் புத்தகத்தை வணங்கியுள்ளாரே?
பதில் : நாடாளுமன்ற கட்டடப் படிகளில் விழுந்து வணங்கி, அந்த கட்டடத்தையே மாற்றி புதிய கட்டடம் நாடாளு மன்றத்துக்கு கட்டிவிட்டார். இந்த முறை அரசியல் சட்ட புத்தகத்தை வணங்கி அதையும் மாற்றப்போவதாக சொல்லாமல் சொன்னாரோ; என்னவோ?
கேள்வி : “ஆட்சிக்குத் தேவை நல்ல மெஜாரிட்டி! நாட்டுக்குத் தேவை நல்ல எதிர்க் கட்சி!” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளாரே?
பதில் : நாட்டுக்குத் தேவையான நல்ல எதிர்க்கட்சியாக நமது பிரதமர் மோடி செயல்பட முடிவெடுத்துவிட்டார் போலும்! ஆட்சியை விட தான் நாட்டையே நேசிப்பதாக நாடகமாடும் மோடி தனது கட்சிக்கு பெரும்பான்மையின்றி ஆட்சியை நடத்துவதை விட்டு இறங்கி விரைவில் நல்ல எதிர்க்கட்சியாக இருந்து நாட்டு சேவையைத் தொடங்குவார் என எதிர்பார்ப்போமாக!
கேள்வி : ஒரு நபர் ஆணய விசாரணையில் நீதி கிடைக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறாரே?
பதில் : தூத்துக்குடி துப்பாக்கிப் பிரயோகம் சம்பந்தமாக அமைத்த ஒரு நபர் ஆணைய கமிஷன் விசாரணையில் நீதி கிடைக்க வில்லையா? ஒரு வேளை பழனிச்சாமி விரும்பிய நீதி கிடைக்காது என்று புலம்பியிருப்பாரோ என்னவோ?
கேள்வி : விஷச்சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் எடப்பாடியும் கேட்கின்றனரே!
பதில் : இந்த விவகார விசாரணையில் ஏதாவது மறைக்கப்படுகிறது, அல்லது மறுக்கப்படுகிறது என்று ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி அதனால் மாநில சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி கேட்டிருந்தால் கூட நியாயம் உண்டு! பொத்தாம் பொதுவாக மாநில போலீஸ் மீது மக்களுக்கு அவநம்பிக்கை உருவாக்கிடும் வகையில் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று கேட்பது எடப்பாடி வகையறாக்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் ஒன்றிய நிதியமைச்சர் நிதானமிழந்து பேசலாமா? பா.ஜ.க. ஆண்டிடும் உ.பி.யில், குஜராத்தில், ம.பி.யில் இதேபோன்று விஷச்சாராயம் அருந்தி நூற்றுக்கணக்கானோர் இறந்த நிலையில் அங்கெல்லாம் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டதா?
விஷச்சாராய சாவு விவகாரம் குறித்து உ.பி.யில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி கேட்டாரே; அப்போதும் ஒன்றிய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இருந்தாரே! அவரும் மாயாவதியுடன் சேர்ந்து உ.பி. கள்ளச்சாராய சாவுக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டாரா? திருமதி நிர்மலா சீத்தாராமனுக்கு உ.பி.யில் ஒரு நீதி - தமிழகத்தில் ஒரு நீதியா? “சி.பி.ஐ. என்ன வானத்திலிருந்து குதித்ததா?” என்று எடப்பாடி பழனிச்சாமியின் தலைவி ஜெயலலிதா கேட்டதை பழனிச்சாமி மறந்து இருக்கலாம்; நாடு மறக்கவில்லை! ஒரு பெரும் துயரச்சம்பவத்தில் 'அரசியல் குளிர்காய' நினைக்கும் அற்பத்தனமே இவை!
கேள்வி : அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய தி.மு.கழகத்துக்கு அழுத்தம் தரவேண்டும். இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டின் ஆன்மாவை அசைத்துள்ளது என்று குறிப்பிட்டு பா.ஜ.க. தேசியத் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜெ.பி.நட்டா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளதே!
பதில் : நட்டா எப்போதுமே அரை குறைத் தெளிவோடு அரசியல் நடத்திடும் கூமுட்டை! தமிழ்நாட்டில் நடப்பது தி.மு.கழக ஆட்சி! கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது ! அது 'இந்தியா' (INDIA) கூட்டணி உருவாவதற்கு முன் தமிழ்நாட்டில் மட்டுமே உருவாக்கிக் கொண்ட கூட்டணி என்பது போன்ற விவரங்கள் கூடத் தெரிந்து கொள்ளாத நிலையில் நட்டா கார்கேக்கு கடிதம் எழுதியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் கட்டடத்தின் கட்டுமானப் பணி துவங்கப்படாத நிலையில் மதுரைக்கு வந்து அங்கு நடந்த தொழிலதிபர்கள் கூட்டத்திற்குப் பின் மதுரை எய்ம்ஸ் தொடர்பாக 95 சதவீத பணி முடிந்துவிட்டதாகக் கூறிய இவரைப் போன்ற பேர்வழிகள் இப்படி அரைகுறைத்தனமாக ஏனோதானோ என்று கருத்தறிவிப்பதில் புதுமை ஒன்றுமில்லையே!
கேள்வி : அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. குழு ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்திக்கச் சென்றது. பின்னர் வெளியே வந்து தமிழிசைதான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அங்கே அண்ணாமலையைக் காணோமே!
பதில் : மூடி மறைக்க நினைத்த சில உள்ளடிக்காட்சிகள் மெதுவாக வெளிச்சத்துக்கு வருகிறது; அவ்வளவுதான்!