நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில், இதில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24 தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதிய அரசின் முதல் கூட்டத்தொடரின்போது தற்காலிக சபாநாயகர் பதவி எப்போதும் நாடாளுமன்றத்தின் மூத்த எம்.பி.க்கு வழங்கப்படுவது மரபு. அந்த வகையில் காங்கிரஸை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் 8-வது முறையாக எம்.பி-யாக இருக்கும் நிலையில், அவரை விட நாடாளுமன்றத்தில் இளையவரான பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் என்பவரை பாஜக அரசு தற்காலிக சபாநாயகராக நியமித்தது.
இதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சி எம்.பிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக துணை சபாநாயகர் பதவியை, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நிராகரித்தனர். அதனைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கினால் சபாநாயகர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்தன.
ஆனால், அதற்கு பாஜக உடன்படாத நிலையில், சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்தன. அதன்படி இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நிலையில், பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனால் 48 ஆண்டுகளில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற்றது.
இதில் பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் தேர்வு செய்யப்பட்ட முதல்நாளிலேயே எதிர்க்கட்சி எம்.பி பேசும்போது மைக் அணைத்துவைக்கப்பட்டது அனைவர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
மக்களவையில், விசிக எம்.பி., திருமாவளவன் உரையாற்றும்போது, கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்ததை போல் இல்லாமல், உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஆளுங்கட்சி, மீண்டும் அத்தகைய முயற்சியை மேற்கொள்ளும். அதற்கு நீங்கள் ஒருபோதும் வளைந்து போகக் கூடாது என்றும் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா காந்தியடிகள் மற்றும் மகாத்மா ஜோதிராவ் பூலே போன்ற மாபெரும் தலைவர்களின் சிலையை ஒரு ஓரமாக கொண்டு போய் வைத்துள்ளது குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென அவரது மைக் அணைக்கப்பட்டது. எனினும் தனது பேச்சை தொடர்ந்த திருமா, அதுகுறித்து கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து திருமாவளவன் பேசிக்கொண்டிரும்போது மைக் அணைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் சபாநாயகர் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.