மகராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை பகடைக்காயாக வைத்து சிவசேனா ஆட்சியை கவிழ்த்து, அக்கட்சியை இரண்டாக உடைத்தது பா.ஜ.க. ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி மகாராஷ்டிராவில் படுதோல்வி அடைந்துள்ளது. ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரை வைத்து மகாராஷ்டிராவில் தனது ஆதிக்கத்தை பா.ஜ.க செலுத்த நினைத்தது. ஆனால் மகாராஷ்டிரா மக்கள் பா.ஜ.க, ஷிண்டே, அஜித் பவார் கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து இருக்கும் பா.ஜ.கவுக்கு அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஹிண்டே இருவரும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். மேலும் நேரடியாகவே பா.ஜ.க அரசை விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
நேற்றுதான், அஜித் பவார் கட்சியின் மூத்த நிர்வாகி சகன் புஜ்பால், ஜார்கண்டில் முதலமைச்சராக இருந்த சிபுசோரன் கைது செய்யப்பட்டதால், மகாராஷ்டிராவில் பழங்குடியின மக்களின் வாக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, ”மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என மோடி பேசியதால் அரசியல் சட்டத்தை மாற்றப்போகிறார்கள் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் கடும் பின்னடைவை நாங்கள் சந்தித்தோம்.” என கூறியுள்ளார்.