கணிப்புகள் அல்ல; திணிப்புகள்
மோடியைவிட மோடிக்காகத் தவம் இருந்தவை பெரும்பான்மை இந்திய ஊடகங்கள்தான். 'ஐயோ பாவம்! மோடி வராமல் போய்விட்டால் இந்த ஊடகங்கள் மறுநாள் காலையில் என்ன செய்யுமோ?' என்று பயந்து விடும் அளவுக்கு மோடிக்காகக் கூவின.
400 வரும், 370 வரும் என்று மோடி சொன்னார் அல்லவா? அதையே இவர்கள் கருத்துக் கணிப்புகளாக வெளியிட்டார்கள். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பிலும் அதைத்தான் சொன்னார்கள். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பிலும் அதையே வழிமொழிந்தார்கள்.
« ரிபப்ளிக் பிமார்க் டிவியானது பா.ஜ.க. 359 இடங்களைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் சொன்னது. இந்தியா கூட்டணிக்கு 154 இடங்கள்தான் கிடைக்கும் என்றது.
« ரிபப்ளிக் மேட்ரிஸ் அறிவித்தபடி பா.ஜ.க. அணிக்கு 353 முதல் 368 வரைக்கும் கிடைக்கலாம் என்றது. இந்தியா கூட்டணியானது 118 – 133 இடங்களையே கைப்பற்றும் என்றது.
« தைனிக் பாஸ்கர் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் 281- 350 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றும் எனச் சொல்லப்பட்டது. இந்தியா கூட்டணி 145 - 201 இடங்களைக் கைப்பற்றும் எனச் சொல்லப்பட்டது.
« இந்தியா நியூஸ் – டைனமிக், 371 இடங்களை பா.ஜ.க. அணி கைப்பற்றும் என்றது. இந்தியா கூட்டணிக்கு 125 இடம் தான் கிடைக்கும் என்றது.
டிவி 5 தனது கருத்துக் கணிப்பில் 359 இடங்களை பா.ஜ.க.வுக்கும் 154 இடங்களை இந்தியா கூட்டணிக்கும் வழங்கியது.
« 'ஜன் கி பாத்' எடுத்த கணிப்பில் 362 – 392 இடங்கள் பா.ஜ.க.வுக்கு கிடைக்குமாம். இந்தியா கூட்டணியானது 141--161 இடங்களைப் பிடிக்குமாம்.
இதேமாதிரிதான் மற்ற தொலைக்காட்சி, செய்தி நிறுவனங்களும் கணிப்புகளை வெளியிட்டன. அதாவது 350 முதல் 420 இடங்களை பா.ஜ.க. அணி கைப்பற்றும் என்பது தான் இவர்களது கணிப்புகள் ஆகும்.
அதாவது ஒரே கம்பெனி தயாரித்து, பல ஜெராக்ஸ்களை எடுத்து எல்லோருக்கும் கொடுத்துவிட்டார்கள். மனச்சாட்சியையும் ஊடக நெறியையும் விற்று இதனை வெளிப்படுத்தி விட்டன ஊடகங்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி, நான்கைந்து டி.வி. சேனல்களின் பெயரைப் போட்டு 'பா.ஜ.க. 371 இடங்களைக் கைப்பற்றும்' என்று பிரேக்கிங் நியூஸ் போட்டார்கள். இது சமூக ஊடகங்களில் கிண்டலடிக்கப்பட்டதும், அடுத்த அரைமணி நேரத்தில் அதை எடுத்து விட்டார்கள். 'மோடி சேவகம்' என்ற பெயரால் ஊடக நெறி, நெரிக்கப்படும் காட்சிகள் இவை.
பா.ஜ.க. அதிகப்படியான தொகுதிகள் வெற்றி பெறும் என்பது மட்டுமே இதில் இருந்த பொய்கள் அல்ல. மாநில வாரியாக எடுத்துப் பார்த்தால், அவர்கள் சொன்ன எண்ணிக்கையில் பலதும் தவறான தகவல்கள்.
இருக்கும் தொகுதியைவிட அதிகமான தொகுதிகளை சில சேனல்கள் போட்டார்கள். போட்டியிடும் தொகுதியைவிட அதிகமான தொகுதியில் வெற்றி பெறுவது போலவும் போட்டார்கள். இப்படி சின்னச் சின்ன பொய்களின் சேர்க்கையாக பெரிய பொய்யைப் பரப்பினார்கள்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஏழு தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சொன்னதை விட மோசடிக்கு உதாரணம் வேண்டுமா?
இவை கருத்துக் கணிப்புகள் அல்ல, கருத்துத் திணிப்புகள் ஆகும். ஒரு பொய்யை இலேசாகப் பரப்பி, மக்கள் மனதில் அதனை இலேசாக நம்ப வைப்பார்கள். அதையே பிரமாண்டமாகப் பரப்பி, அதையே பரவலாகக் கொண்டு சேர்ப்பார்கள். பிரமாண்டமாகப் பரப்பப்படும் செய்தி, உண்மை என நம்பப்படும்.
மோடி சொன்னதைத்தான் ஊடகங்களும் சொன்னது என நிறுவுவார்கள். இது ஒரு வகையான மனோவியல் திணிப்பு ஆகும். நிறையப் பேர் சேர்ந்து சொன்னால் அது உண்மை என உருவகப்படுத்துவது ஆகும். அதனைத்தான் ஊடகங்கள் செய்தன. இவை கணிப்புகள் அல்ல, மக்கள் மனதில் உள்ளத்தில் செய்யப்படும் திணிப்புகள் ஆகும்.
'இதுதான் உண்மையான ரிசல்ட்' என்று மோடி ‘ட்விட்' போட்டார். 'எங்களுக்குப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்து விட்டார்கள்' என்று அவரே தன்னைப் பாராட்டிக் கொண்டார். பொய்ப் பல்செட் வைத்துக் கொண்டு, 'என் பல்லு எவ்வளவு வெள்ளை பார்த்தியா' என்று சொல்வதைப் போலத்தான் இதுவும்!
இதற்குப் பின்னால் இருக்கும் ஊழலை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்பலப்படுத்தி இருக்கிறார். "வாக்கு எண்ணிக்கை தினத்தன்று, சில்லறை முதலீட்டாளர்களுக்கு 30 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பீட்டை ஏற்படுத்திய மிகப்பெரிய பங்குச் சந்தை மோசடியில் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது" என்று ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார்.
"சூன் 1 ஆம் தேதி கடைசிக்கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ஊடகங்கள் வெளியிட்டன. அதைத் தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பங்குச் சந்தை உச்சம் கண்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நாளான சூன் 4 அன்று பங்குச் சந்தை மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. பங்குச் சந்தையில் இலாபம் ஈட்டுவதற்காக தேர்தல் வாக்குக் கணிப்பைத் திரித்துள்ளனர்.
இந்த போலியான வாக்குக் கணிப்பை உண்மை என நம்பி, ஏராளமான சில்லறை முதலீட்டாளர்கள் பல மடங்கு முதலீட்டைச் செய்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்று ரூபாய் 473 லட்சம் கோடியாக இருந்த மும்பை பங்குச் சந்தையின் மதிப்பு ரூபாய் 394 லட்சம் கோடியாகச் சரிந்தது.
இதன் காரணமாக சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. போலியான வாக்குக் கணிப்பை வெளியிட்டவர்களுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது" என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
"பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள்" என்று மே 13 ஆம் தேதி அமித்ஷாவும், மே 19 ஆம் தேதி மோடியும் பேட்டி அளித்ததை ராகுல்காந்தி ஆதாரமாகச் சொல்லி இருக்கிறார்.
மக்கள் மீது மனரீதியாகவும், பணரீதியாகவும் நடத்தப்பட்ட உளவியல் தாக்குதலே இந்தக் கருத்துத் திணிப்புகள் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.