ஒன்றிய பா.ஜ.க அரசால், அமல்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து, 2021ஆம் ஆண்டு இந்தியா முழுக்க விவசாயிகள் போராட்டம் முழு வீச்சில் நடைபெற்ற போது,
பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசத்திலும் விவசாயிகளால் போராட்டம் நடந்தது. அப்போது, உத்தரப் பிரதேசத்தின் லகிம்பூர் பகுதியிலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து பேரணியாக விவசாயிகள் சென்றனர்.
அப்போது, அப்பேரணியின் நடுவே, உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன், ஆசிஷ் மிஸ்ரா சென்ற மகிழுந்து புகுந்து, 8 பேர் பலியாக நேர்ந்தது.
பலியானவர்களில் பத்திரிகையாளர் ஒருவரும், விவசாயிகள் நால்வரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அச்சமயத்தில் விவசாயிகள் மீது மகிழுந்து ஏறிச்சென்ற காணொளிகளும் சமூக வலைதளத்தில் வெகுவாக பரவியது.
நாட்டின் முக்கிய சிக்கலாக, இது அப்போது பார்க்கப்பட்டது. ஆனால், 8 பேரை மகிழுந்து ஏற்றி கொன்ற, ஆசிஷ் மிஸ்ரா அதற்கான தகுந்த தண்டனையை பெற்றிருக்கிறாரா என்றால், இல்லை. தற்போது நீதிமன்றத்தில் பிணை பெற்று, நிரபராதி போல் சுற்றித்திரிந்து வருகிறார்.
அவருக்கு வழங்கப்பட்டிருக்கிற தண்டனை என்பது, அவர் உத்தரப் பிரதேசத்தினுள் வரக்கூடாது என்பதே, ஆனால், அதனையும் ஆசிஷ் மிஸ்ரா மீறி வருவதாக கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் வழக்கு தொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க.வின் நடப்பு மக்களவை உறுப்பினரும், மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றம் சாட்டப்பட்டவருமான பிரிஜ் பூஷன் மகன் மற்றும் பா.ஜ.க.வின் மக்களவை வேட்பாளர் கரண் பூஷன் பாதுகாப்பிற்கு சென்ற மகிழுந்து ஏறி, 17 வயதுள்ள ரேஹான் என்ற சிறுவரும், 24 வயது ஷாசாத் என்கிற இளைஞரும் இறந்துள்ளது கூடுதல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து, திரிணாமுல் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே, “முன்பு, பா.ஜ.க அமைச்சர் அஜெய் மிஸ்ரா மகன் அப்பாவி விவசாயிகளை கார் ஏற்றி கொன்றார். தற்போது பிரிஜ் பூஷன் மகனின் பாதுகாப்பு வாகனம் இருவரை கொன்றுள்ளது. பிரிஜ் பூஷன் மகன் உண்மையாகவே, அந்த வாகனத்தில் இல்லையா? முதலில் அவருக்கு பாதுகாப்பு வாகனம் எதற்கு?
பாலியல் வன்முறையாளருக்கு பதிலாக, தற்போது கொலைகாரரை மக்களவை வேட்பாளராக தேர்ந்தெடுத்திருக்கிறதோ, பா.ஜ.க?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரையடுத்து, இணையவாசிகள், “உத்தரப் பிரதேசத்தில், மதத்தின் பெயரால் பெற்றுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அப்பாவி மக்களை மகிழுந்து ஏற்றி, கொன்று வரும் பா.ஜ.க.வினரின் ஆட்டம் அதிகரித்து வர, ‘குற்றம் செய்தாலும் - தண்டனை இல்லை’ என்ற எண்ணமே காரணம்” என தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.