மிகப்பெரும் மாற்றத்தை நோக்கி, நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில், தேர்தல் விதிமுறை மீறல்களுக்கும், தேர்தல் ஆணையத்தின் மந்த நடவடிக்கைகளுக்கும் தொய்வில்லை என்பது நாளுக்கு நாள் அம்பலப்பட்டு வருகிறது.
அதன்படி, பா.ஜ.க.வினரால் அளவுகடந்த அட்டூழியங்கள் நடத்தப்படுவதும், அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பதும், தொடர்ந்து நடந்து வருகிற சூழலில், தேர்தல் விதிமுறைகளை சரிவர பின்பற்றாமல் இருப்பது பா.ஜ.க.வினர் மட்டுமல்ல, தேர்தல் ஆணையம் கூட தான் என்பதும் அண்மையில் வெளிப்பட்டுள்ளது.
அவ்வெளிப்பாடகவே, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையத்தின் பதிலும் அமைந்துள்ளது.
வாக்குச்சாவடி வாரியான வாக்கு எண்ணிக்கை விவரங்களை இணையதளத்தில் வெளியிடக் கோரிய வழக்கில், “வாக்குச்சாவடி வாரியான வாக்கு எண்ணிக்கையை வெளியிடுவது சட்டப்படி கட்டாயம் இல்லை” என்பது தான் அந்த பதில்.
இது குறித்து, சிவ சேனா (தாக்கரே) மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, “தேர்தல் வாக்குப்பதிவு குறித்த தரவுகளை வெளியிடாமல், தேர்தல் ஆணையம் ஏன் ஓடி ஒளிகிறது? வெளிப்படைத்தன்மை தான் ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு அடிப்படை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கையை வெளியிடுவது கட்டாயம் அல்ல என தேர்தல் ஆணையம் பதிலளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கொண்ட Form 17-ஐ பதிவேற்ற, சட்டப்பூர்வ கட்டாயம் ஏதுமில்லை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொல்லியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எண்ணப்படும் வாக்குகள் பற்றிய தரவு பதிவேற்றப்பட முடியும் சூழலில், பதிவு செய்யப்பட்ட வாக்குகள் ஏன் பதிவேற்ற முடியாது? இத்தகைய தேர்தல் ஆணையத்தை எப்படி நம்புவது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இவர்களையடுத்து, Handbook For Returning Officer 2023 என்ற தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் புத்தகத்தில், ஒவ்வொரு வாக்கு இயந்திரத்திலும் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை வாக்குப்பதிவு நிறைவுற்றதும், அறிந்துகொள்ளலாம் என்று இடம்பெற்றதை சுட்டிக்காட்டி,
வாய்ப்பு இருக்கும் சூழலிலும், அப்பட்டமாக ஏன் தரவுகளை, தேர்தல் ஆணையம் மறைக்கப்பார்க்கிறது? என திரிணாமுல் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறு, தேர்தல் ஆணையத்தின் மோசடிகள் அம்பலப்பட்டு வந்தாலும், ஜனநாயகத்தை நிறுவ தேர்தல் ஆணையம் தாயாராக இல்லை என்பது அரசியலமைப்பு காக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு விதையாக அமையப் பெற்றிருக்கிறது.
இதற்கான சட்ட நடவடிக்கைகள், ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், ஆட்சி மாறினால் மட்டுமே, பல மோசடிகள் வெளிப்படும் என நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.