ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களை செய்து வருகிறது. விவசாயிகள் நலன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்கள் நலன், கல்வி முன்னேற்றம் என பல வாக்குறுதிகளை கொடுத்து, அதனை 'ஜூம்லா'-வாக செய்து வருகிறது பாஜக அரசு. மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக பல திட்டங்களை அறிவித்தது.
அதில் ஒன்றுதான், 3 வேளாண் சட்டம். இதனை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். எனினும் அதனை கண்டுகொள்ளாத பாஜக அரசு, அவர்கள் மீது வன்முறையை ஏவியது. விவசாயிகளுக்கு முறையான விளைப் பொருளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காததால் நஷ்டமடையும் விவசாயிகள், தாங்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.
விவசாயிகள் தற்கொலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் கடனை தள்ளுபடி செய்யாமல், பெரிய தொழிலதிபர்களின் கோடி கணக்கிலான கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. அண்மையில் கூட குறைந்தபட்ச ஆதார விலையை கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் டெல்லி முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டனர்.
அப்போது பாஜக அரசின் பேச்சை கேட்டு, போலிசார் நடத்திய தாக்குதலில், இளம் விவசாயி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். எனினும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விடாமல் தொடர்ந்து வந்த நிலையில், பாஜக அரசு அதனை சற்றும் கருத்தில் கொள்ளாமல் தவிர்த்துக்கொண்டே வருகிறது. இதன் எதிரொலியாக பாஜக வேட்பாளர்களுக்கு பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் தற்போது 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஒன்றிய பாஜக அரசு அவர்களை சற்றும் மதிக்காமல் தங்கள் வேலையை மட்டுமே பார்த்து வருகிறது. இதனை கண்டித்து நாளை பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மே 25-ம் தேதி 6-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை (மே 23) பஞ்சாபில் மோடி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது மோடி பிரசாரம் மேற்கொள்ளும் அனைத்து இடங்களிலும் விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். விவசாயிகள் எதிராக தற்போது வலம் வரும் மோடி மற்றும் பாஜகவினருக்கு இந்த தேர்தலில் விவசாயிகளே தக்க பதிலடி கொடுப்பர்.