கடந்த காலங்களில், மணிப்பூர் மக்கள் என்றாலே போராட்ட குணம் படைத்தவர்கள். தேசிய அளவில் ஜனநாயக கடமையாற்றுவதில் முதல் இரண்டு இடங்களில் நிலையாக இருப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு செய்திகளே கண் முன் வந்த நிலையில் இருந்து,
தற்போது மணிப்பூர் என்றாலே கலவரம், பாலியல் வன்முறை, சிறுபான்மையினர் விரட்டடிப்பு, இணைய துண்டிப்பு, கொடுங்கோள் ஆட்சி ஆகியவை தான் என்பது நினைவிற்கு வரும் அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது.
இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் தங்களது காலங்களை கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சரியான இணைய வசதி இல்லாததால், அங்கு நிகழும் பல செய்திகள் பல மாதங்களுக்கு பிறகே வெளிவருகிறது.
அவ்வகையில், சில மாதங்களுக்கு முன் கலவரக்காரர்களால், நிர்வாணமாக ஒரு பெண் இழுத்து செல்லப்பட்டதற்கு, காவல் துறையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது அண்மையில் தான் அம்பலப்பட்டது.
இந்நிலையில், “வெளிநாடுகளுடன் எல்லை பகிரும் மாநிலங்களின் எல்லைகளில் வாழும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையெனில், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), குடியுரிமை திருத்தச்சட்டம் (CAA) என்கிற பெயரில், குடியுரிமையை பா.ஜ.க பறிக்க நேரிடும் என மேற்கு வங்க முதல்வர்” எச்சரித்து வருவதற்கு இணங்க,
மணிப்பூரில் சட்டத்திற்கு புறம்பாக உட்புகுந்தவர்கள் என 5,000க்கும் மேற்பட்டவர்களை சுட்டிக்காட்டி, அவர்களை நாடுகடத்த திட்டமிட்டுள்ளார் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்.
எனினும், இது குறித்த நாடுகடத்தப்படும் மக்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்று கூட தெரியாத அளவிற்கு, அம்மக்களின் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தகுந்த ஆதாரங்களை வெளியிடாமல், 5,000-க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்படுவர் என மணிப்பூர் பா.ஜ.க முதல்வர் பைரன் கூறியுள்ளது, ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான வகையில் அமைந்துள்ளது.
இது போலவே, அசாமில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க, அசாமில் வாழ்ந்த 19 இலட்சம் பேர் நாட்டின் குடிமக்களே இல்லை என NRC மூலம், நாட்டை விட்டு வெளியேற்றியது. அதில் சுமார் 7 இலட்சம் மக்கள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, சிறுபான்மையின மக்களின் குடியுரிமையை பறிக்கும், பா.ஜ.க.வின் நடவடிக்கைக்கு, இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல், CAA, NRC சட்டங்களை செயல்படுத்த முடியாது எனவும் உறுதியளித்து வருகின்றனர்.