ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை.அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக அரசின் கடும் எதிர்ப்புகளை மீட்டி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது பாஜக அரசு. ஹரியானா - ஷாம்பு எல்லையில் போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் மீது பாஜக ஆளும் ஹரியானா மாநில போலிஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன் தாக்கம் காரணமாக ஹரியானாவின் 60க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்களில் பாஜகவினர் உள்ளே நுழைய தடை விதிக்கப்படுவதாக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. பாஜக மட்டுமின்றி பாஜகவின் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் விவசாயிகள் முற்றுகையால் கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
கிசார் தொகுதியின் வேட்பாளர் நயினாசவுத்தாலா பிரச்சாரம் சென்றபோது அவரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். தற்கான், உச்சனா ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய சென்ற அவரை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பிரச்சாரம் செய்ய முடியாமல் திரும்பி சென்றார். அரியான மாநிலம் முழுவதும் பாஜக வேட்பாளர்களும், கூட்டணி கட்சியான ஜே ஜே பி வேட்பாளர்களும் பிரச்சாரம் செல்லும் இடங்களில் எல்லாம் விவசாயிகள் முட்டையிட்டு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.