“எந்த முகத்துடன் மோடி தமிழ் நாட்டுக்கு வருகிறார்?”
கழகத் தலைவர், தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், கடல் காணா மதுரை; மக்கள் கடலில் மிதந்ததோ எனும் அளவு, கண்ணுக்குத் தெரியும் விண் முட்டும் தொடுவானத்தையும் கடந்து கண் கொள்ளாக் காட்சியாக மக்கள் வெள்ளக் காடாகக் காட்சியளித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எழுப்பிய இந்தக் கேள்வி, முதலமைச்சர் மட்டும் எழுப்பிய கேள்வி அல்ல;
வெள்ளம், மழை, புயல்களால் பாதிக்கப்பட்டு, தங்களது வாழ்க்கையைத் தொலைத்து, ‘எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதோ’ என்று தவித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவரது உள்ளத்திலும் கொந்தளித்திடும் கேள்வி! அவர்களது குமுறல்களின் எதிரொலி!
‘தங்களது பதவி பறிபோய்விடுமோ’ என்ற பதட்டத்தில் இன்று ‘ரோட் ஷோ’ நாடகம் நடத்தும் மோடிகளையும், ராஜ்நாத்சிங்குகளையும், நட்டாக்களையும் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் வெறுப்பைக் கக்கிட நினைத்தாலும், கண்ணியம்
காத்திட நினைத்து அவ்வாறு செய்யாது, எழுப்பிடும் கேள்வியின் பிரதிபலிப்புதான் அது!
“எந்த முகத்துடன் மோடி வருகிறார்?”
எதிர்பாரா இயற்கைப் பேரிடர்களால் உள்ளதை எல்லாம் இழந்துவிட்டோம், எஞ்சிய வாழ்வை எப்படி நடத்துவோம்; என அல்லலுற்று அழுத மக்களுக்கு ஆறுதல் கூறக்கூட வராதவர்கள் இப்போது எந்த முகத்தோடு வருகிறார்கள்?
லஞ்சத்தை ஒழிப்பேன் எனச் சூளுரைத்து இன்று லஞ்ச மஞ்சத்தில் துகிலும் முகத்தோடா?
‘வாரிசு அரசியலை அழிப்பதே லட்சியம்’ என்று அறிவித்து, இன்று வாக்குக்காக வாரிசுகளோடு கொஞ்சிக் குலவிடும்
வஞ்சக முகத்தோடா?
“எய்ம்ஸ் வருகிறது... இந்த ஆண்டு வருகிறது... அடுத்த ஆண்டு வந்து விடும்.. 90 சதவிகிதம் வேலை முடிந்துவிட்டது” என்று ஆண்டுக்கணக்கில் பொய் கூறி மக்களை ஏமாற்றும் எத்து முகத்தோடா?
தமிழ்நாடு செலுத்தும் வரியை எல்லாம் வாங்கிக் குவித்து, அதனை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டுக்கு ‘பே.. பே...’ கூறிடும் வஞ்சனை முகத்தோடா?
அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ. போன்ற துறைகளை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தி – எதிர்ப்பவர்களை சிறையில் முடக்கி, சந்தோஷம் கொண்டாடும் ‘சேடிஸ்ட்’ முகத்தோடா?
உயர்சாதி இந்துக்களை மட்டுமே இந்துக்களாகக் கருதி வளர்த்திடவும் மற்ற இந்துக்களை மட்டம்தட்டி அழுத்திடவும் சிறுபான்மை மக்களை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து சமுதாய மக்களை பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரை களாய், அடிமைப் புழுக்களாய் ஆக்கிடத் துடிக்கும் ஆதிக்க சக்திகளுக்கு வலு சேர்க்கும் விபீஷண முகத்தோடா?
ராஜாஜி ஆண்டபோது கொண்டுவந்த குலக் கல்வி முறை அதாவது தந்தை மற்றும் முன்னோர் செய்த தொழிலை இளைஞர்கள் செய்திட வழிவகுக்கும் கல்வி முறைத் திட்டத்தை மீண்டும் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டம் என்று புதிய வழியில் கொணர்ந்து, செருப்புத் தைக்கும் தொழிலாளி மகன் செருப்புத் தைக்கவும், தச்சு வேலை செய்பவர் மகன் தச்சு வேலை செய்யவும், முடிவெட்டுபவர்களின் வாரிசுகள் முடிதிருத்தம் செய்பவர்களாகவே வாழ வேண்டும் என்பது போன்ற நிலையை உருவாக்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதியை மறுத்து வருணாசிரமத்திற்கு வாழ்வு தர உந்துசக்தித் திட்டங்களை உருவாக்கிவிட்டு, சமூக நீதிக்கு வித்திட்டு வளர்த்துள்ள திராவிட மண்ணுக்கு எந்த முகத்தோடு வருகிறார்?
‘தன்னை எந்தச் சக்தியாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது’ என்ற இறுமாப்பு முகத்தோடா?
அரசியல் அமைப்புச் சட்டத்தை அலங்கோலப்படுத்திட, ஆளுநர்களை அனுப்பி, அவர்கள் மக்கள் ஆட்சித் தத்துவத்தைச் சிதைத்து மண்மேடாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டும் காணாததுபோல நடித்துக் கொண்டிருக்கும் மோடி; இன்று மக்களைக் காண எந்த முகத்தோடு வருகிறார்? கபடவேட முகத்தோடா?
ஜனநாயகத்தின் அடித்தளங்கள் அத்தனையையும் அடித்து நொறுக்கிவிட்டு அதிகார மமதையில் ஆர்ப்பரித்திடும் பாசிச முகத்தோடா?
தமிழ்மீதும் – தமிழ் மண்ணின் மீதும் அதீத பற்றுக் கொண்டவர் போல வெளிவேஷம் போட்டு, வாயில் நுழையாத சமஸ்கிருத, இந்திப் பெயர்களை மட்டுமே ஒன்றிய அரசின் திட்டங்களுக்குச் சூட்டி – முத்துநகர், பொதிகை, பல்லவன், பாண்டியன், சேரன், சோழன், கம்பன், என்றெல்லாம் புகைவண்டிகள் ஓடிக் கொண்டிருந்த தமிழ் மண்ணில் இன்று – தேஜஸ்,
ஜன் சதாப்தி, வந்தேபாரத் என்று வடமொழியில் பெயர் சூட்டி புகை வண்டிகளை தமிழகத்தில் ஓடவிட்டு தமிழைச் சிதைத்திடும் பசப்பு முகத்தோடா?
இப்படி – மோடியை நோக்கி தமிழ் மக்கள் எழுப்பிடும் கேள்விகள் இன்னும் ஏராளம் உள்ளன.
அருணகிரிநாதர் இன்றிருந்தால் மோடியின் முகங்களுக்கு ஒரு புதிய திருப்புகழே பாடியிருப்பார்.
“பொய்யை மெய்போல
பேசும் முகம் ஒன்று
வஞ்சகம் செய்து விட்டு
வாஞ்சை மொழி பேசும் முகம் ஒன்று
ஊழலிலே உறைந்துகொண்டு
ஊழலை ஒழிப்பதாக
நாடகமாடும் முகம் ஒன்று
(மணிப்பூரில்) பஞ்சமா பாதகங்கள்
நடக்கும்போதும்,
பதறாத முகம் ஒன்று
ராஜதர்மத்தை காற்றில் பறக்கவிட்டும்
அசராத அதர்ம முகம் ஒன்று
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று
பேசும்கள்ள முகம் ஒன்று
கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு வைத்து
காட்டாட்சி நடத்தும் முகம் ஒன்று
மாறுபடு மக்கள் தலைவர்களை
வதைத்து மகிழும் முகம் ஒன்று”
– என்று மோடியின் முகங்களை இன்னும் அழகாக
வரிசைப்படுத்திப் பாடியிருப்பார்!
மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளையும், உத்தரவாதங்களையும் வாரி வழங்கி, அவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டு ஆட்சி பீடம் ஏறிய பிறகு அவர் இந்தியாவில் இருந்த காலம் சொற்பமே!
வாக்குறுதிகள் பலவற்றை வாரி வழங்கி விட்டு, பதவி ஏற்றபின் வானூர்தி ஏறி அயல்நாடுகளுக்குப் பறந்து கொண்டிருந்தாரே தவிர, கொடுத்த வாக்குறுதிகள் பற்றி சிறிதும் கவலைப்பட்டவரில்லை மோடி.
பலமுறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டாரே; ஒருவேளை வாக்குறுதி கொடுத்தவாறு அயல்நாட்டு வங்கி களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டிடும் நடவடிக்கைகளாக இருக்குமோ என்று கருதி விடாதீர்கள்!
‘ஓய்வெடுக்காமல் உழைக்கிறார் பிரதமர் மோடி’ என்று இங்கே பிரச்சாரம் செய்கிறார்களே; அவர் ஓய்வெடுக்காமல் பிரதமராக இருந்த 55 மாதங்களில் 92 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்ததன் விளைவாக, அதாவது 2014ஆம் ஆண்டு அவர் பிரதமராக ஆனதிலிருந்து 55 மாதங்களில் 92 நாடுகளில் சுற்றுப் பயணம் செய்ததின் மொத்தச் செலவு 2,021 கோடி ரூபாய் என்று ஒரு அதிகாரப்பூர்வத் தகவல் கூறுகிறது.
இப்படி ‘கொரோனா’ தொற்றிய காலத்தை மட்டும் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் எல்லாம் விதவிதமான உடை தரித்து உலகச் சுற்றுலா நடத்தியவரைத்தான் – இந்த நாட்டுக்காக ஓய்வின்றி உழைத்தவர் என்கின்றனர்.
வெளிநாடுகளுடன் இந்தியாவின் உறவை பலப்படுத்த மோடியின் வெளிநாட்டுப் பயணம் பயன்பட்டுள்ளது என்று பி.ஜே.பி. வருணித் தாலும், மோடி அதிக அளவு வெளிநாடுகளில் தான் இருந்து கொண்டிருக்கிறார் என்றும், வெளிநாட்டுப் பயணங்களுக்கு இடையிடையே இந்தியா வந்து போகிறார் என்றும், ‘வெளிநாட்டு வாழ் இந்தியப் பிரதமர்’ என்றும், கேலியும் கிண்டலுமாக ‘ட்வீட்’ செய்யும் அளவு மோடி பறந்து கொண்டே இருந்தார் என்பதையும் மறுக்க இயலாது.
அப்படிப் பறந்து கொண்டிருந்தவரால், மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் கலவரங்களால் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டும், மக்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியும் மரண ஓலம் எழுப்பிய காலங்களில், அங்கு சென்று ஆறுதல் கூற நேரம் இல்லாமல் போயிற்றா?
பஞ்சாப் மாநில விவசாயிகள் வெயிலிலும், மழையிலும், குளிரிலும் வாடி ஏறத்தாழ ஓராண்டு காலம் போராடிக் கொண்டிருந்தார்களே, அவர்களைச் சந்திக்க நேரம் இல்லையா? என்பன போன்ற நியாயமான கேள்விகள் எழுந்தனவே, மோடி அந்தக் கேள்விகள் எதற்கும் வாயையே திறக்கவில்லையே, ஏன்?
“மோடி வெளிநாட்டுப் பயணங்களில் காட்டும் ஆர்வத்திலும், செலவழிக்கும் நேரத்திலும் கொஞ்சம் உள்நாட்டுப் பயணம் செய்வதற்கும் பயன்படுத்தியிருந்தால், நம் நாட்டு மக்கள் வேதனையில் வாடும் நிலையைத் தெரிந்து கொண்டிருக்க
முடியும்” என்று இன்று மோடியின் நண்பராக ஆகியிருக்கும் நிதிஷ்குமார் அன்று விமர்சித்தாரே,
இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு இடையே, வெளிநாடுகளுக்குப் பறந்து செல்வதைக் குறிப்பிட்டு, தான் ஓய்வில்லாமல் உழைத்து வருவதாகக் கூறுகிறார் மோடி!
நாம், ‘ஓய்வின்றி மோடி உழைக்கிறார்’ என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஓய்வின்றி இத்தனை நாடுகளுக்கு செல்லத் தெரிந்தவருக்கு; குஜராத்தில் வெள்ளம் என்றால் ஓடோடிச் சென்று ஹெலிகாப்டர் எடுத்துப் பறந்து அந்தப் பகுதிகளை சுற்றிப் பார்த்து உடனடியாக ஆயிரம் கோடியை அள்ளிக்
கொடுத்த ஈகை குணம் கொண்டவருக்கு,
தமிழ்நாட்டில் வெள்ளம் சூழ்ந்து, வரலாறுகாணா புயல் மழையால் மக்கள் வாழ்வாதாரமிழந்து எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கித் தவித்தபோது ஒரு ஆறுதல் கூறக்கூட வரத் தெரியவில்லையா?
ஆறுதல் கூற அவர் வந்திட குஜராத் போல் தமிழ்நாடு அவரது சொந்த மாநிலமாக இல்லாமல் இருக்கலாம்; வரவேண்டாம். உடனடி நிவாரணமாக சில கோடிகளைக் கூடத் தராத கல் மனதுக்காரர் இன்று, ஓட்டுக்காக தமிழ் மக்களைத் தேடி ஓடோடி வருகிறாரே; எப்படி இப்படி வெட்கம் சிறிதுமின்றி கூச்ச நாச்சமற்று நடிக்க முடிகிறது மோடியால்?
நினைக்கவே தகிக்கிறதா?
அதுதான் மோடி!
அதுவே அவரது நடிப்பாற்றல்!
- சிலந்தி!