அரசியல்

“வர்ணபேதம் ஒழியவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுமா?” - தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி!

10 ஆண்டுகாலம் தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யாமல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வராத பிரதமர், ஓட்டு கேட்க மட்டும் தமிழ்நாட்டுக்கு வருவது ஏன்? என திக தலைவர் கி.வீரமணி கேள்வி.

“வர்ணபேதம் ஒழியவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுமா?” - தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பத்து ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி தமிழ்நாட்டுக்குச் செய்தது என்ன? ஒரு கண்ணுக்கு வெண்ணெய் - இன்னொரு கண்ணுக்குச் சுண்ணாம்பு என்ற பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று முதலமைச்சர் பேசிய எழுச்சி உரையை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற நம் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (14-3-2024) வடசென்னை வளர்ச்சிக்கான 11 துறைகளை உள்ளடக்கிய 4181.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து ஆற்றிய விளக்கவுரையில், பல முத்தான கருத்துகளை முன்வைத்ததோடு, தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி அவர்களை நோக்கிய, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒலிக்கும் வகையில், சில வினாக்களை விடுத்ததோடு, ‘‘பிரிவினைவாதிகள்’’ என்று வீண்பழிபோடுவதையும், ஆதாரமற்ற பொல்லாங்கு பேச்சு என்பதையும் நன்கு விளக்கியுள்ளார்!

பொறுப்புடனும் அமைந்த பொருள் பொதிந்த உரை அது! :

சென்னையை உயர்த்த தமிழ்நாடு அரசு நாளும் திட்டங்களை அறிவித்து செயல்பட்டுவருகிறது! ‘‘நம்முடைய அரசு, இப்படி சென்னையை உயர்த்த நாள்தோறும் புதிய புதிய திட்டங்களாக நிறைவேற்றுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை எப்படி வெள்ளத்தில் முழ்கியது? சென்னை மட்டுமா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிதிநிலைமையும் மூழ்கடித்துவிட்டு சென்றார்கள். அவர்களைப் போன்று தான் 10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியும் சென்னைக்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கும் ஒன்றும் செய்யவில்லை.

“வர்ணபேதம் ஒழியவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுமா?” - தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி!

ஆனால், நாளைக்கு பிரதமர் மோடி கன்னியாகுமரி வரப்போகிறார். எதற்காக வரப் போகிறார்? தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்கித் தர வரப் போகிறாறா? இல்லை, ஓட்டு கேட்டு வரப் போகிறார். ஓட்டு கேட்டு வருவதை நான் தவறு என்று சொல்ல விரும்பவில்லை.

வெள்ளத்தில் மக்கள் மிதந்தபோது வராத பிரதமர் மோடி, இப்பொழுது அடிக்கடி வருவது ஏன்? :

சென்னை வெள்ளத்தில் மிதந்த போது, மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், தூத்துக்குடியும், கன்னியாகுமரியும் வெள்ளத்தில் மிதந்த போது மக்களைப் பார்க்க வராத பிரதமர், ஓட்டு கேட்டு மட்டும் வருவது நியாயமாக இருக்கிறதா? குஜராத் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, அன்றைய தினமே ஹெலிகாப்டரில் சென்று பார்த்தாரே! மறுநாளே, நிவாரண நிதி கொடுத்தாரே! குஜராத்திற்கு ஏன் கொடுத்தீர்கள் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டுக்கு ஏன் தரவில்லை என்று தான் கேட்கிறேன். குஜராத்துக்கு அன்றைய தினமே நிதி தருவதும், தமிழ்நாட்டிற்கு மூன்று மாதம் சென்ற பிறகும் நிதி தர மனதில்லாமல் போவதும் ஏன்? இதைக் கேட்டால், நம்மை பிரிவினைவாதி என்று அடையாளம் காட்டுகிறார்கள். நம்மை பிரிவினைவாதி போல் பேசுகிறார்கள்.

அது மட்டுமா? சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டப் பணி! நாம் ஆட்சிக்கு வந்த உடனே, பிரதமரை நான் முதல் முறையாக பார்க்கச் சென்றபோது, மெட்ரோ பணிக்கு நிதி கேட்டேன். இப்போது, 3 ஆண்டுகள் ஆகின்றன, என்ன நிலைமை? நமக்கு அடுத்து கேட்ட மாநிலங்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால், நமக்கு ஒன்றும் வரவில்லை! தரவில்லை!

“வர்ணபேதம் ஒழியவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுமா?” - தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி!

தமிழ்நாடு கொடுக்கும் நிதிக்கேற்ப ஒன்றிய அரசு திருப்பிக் கொடுக்கிறதா? :

நாம் கேட்டுக் கொண்டே இருப்பது என்ன? ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாய் எங்கிருந்து போகிறது? நம்முடைய தமிழ்நாட்டில் இருந்து போகிறது. நம்முடைய பணம் தான் போகிறது. ஆனால், அதற்கேற்ற மாதிரி திருப்பி தருகிறார்களா? நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், 28 பைசா தான் மறுபடியும் நமக்கு வருகிறது! அதையாவது ஒழுங்காக கொடுக்கிறார்களா? இல்லை!

நிதி கேட்டு கடிதம் எழுதுகிறோம்! நம்முடைய எம்.பி.க்கள் எல்லாம், நிதி கொடுங்கள் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். அதற்குப் பிறகு தான் அந்த 28 பைசாவையும் கொடுக்கிறார்கள். இதை சொன்னால் நாம் பிரிவினை பேசுகிறோமா!

பிரிவினை பேசுவது - காட்டுவது யார்? :

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே! மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களே! பிரிவினை எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்று தான் கேட்கிறோம். நான் அழுத்தம் திருத்தமாக சொல்வது, தேசபக்தியை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டியது அவசியம் இல்லை. நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டிய அவசியமே கிடையாது’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

அடுக்கடுக்கான ஆதாரப்பூர்வ நிகழ்வுகளை வரலாற்றிலிருந்து எடுத்து வரிசையாக நிற்க வைத்துள்ளார்.

‘‘தி.மு.க.வை அழிப்பேன், ஒழிப்பேன்’’ என்று ஒரு பிரதமர் பேசுவது பண்பாடுதானா? :

தமிழ்நாட்டிற்கு தங்களது ‘அமிர்தகால’ ஆட்சியின் பெருமைகளை அடுக்கிக் காட்டுவதை விடுத்து, ‘‘தி.மு.க.வை அழிப்பேன், ஒழிப்பேன்’’ என்று மோடி தான் வகிக்கும் பிரதமர் பதவியின் மாண்பையே மறந்துவிட்டுப் பேசுகிறார்!

‘‘இந்தியாவின் 140 கோடி மக்களும் என் மக்கள் - என் குடும்பம்‘’ என்று கூறும் அவரது உள்ளத்தில், அது உண்மையானதாக இருந்தால், தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்களிலும், சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் 146 ஆண்டுகள் காணாத வகையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம், தமிழ்நாட்டு மக்களை பேரிடருக்கு ஆளாக்கியபோது வந்தீர்களா? கேட்ட நிதியைக் கொடுக்காவிட்டாலும், நீங்கள் அனுப்பிய வெள்ள நிவாரண ஒன்றிய ஆய்வுக் குழு அறிக்கைப்படியாவது ஏதாவது உதவி அளித்தீர்களா? மணிப்பூரை மறந்த கதை ஒருபுறம் இருக்கட்டும்.

“வர்ணபேதம் ஒழியவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுமா?” - தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓர் ஆறுதல் வார்த்தையாவது பிரதமர் கூறியதுண்டா? :

தமிழ்நாட்டிற்கு வாக்குக் கேட்க வரும் பிரதமர், தமிழ்நாட்டு மக்களின் துயர் துடைப்பதற்கு நிதி தராததைவிடக் கொடுமை, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்து ஓர் ஆறுதல் வார்த்தைக்கூட கூறாத நிலையில், அவர்களது துன்பம், துயரம் உங்களது கண்களுக்குத் தெரியவில்லை. அவர்களது ஆறாத் துயரம், அழுகுரல் உங்களது காதுகளுக்குக் கேட்கவில்லை - அவர்களது கையில் உள்ள வாக்குச் சீட்டு மட்டுமே தெரிகிறது!

அதை முன்பு நிறைவேறாத ‘கியாரண்டி’களைக் கூறியதுபோல - இப்போது புதிய புதிய வாக்குறுதிகளை - மயக்க பிஸ்கெட்டுகளைப் போல தந்து விடுவது - ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளிவிட்டுப் போவது - ஆரோக்கிய அரசியலாகுமா? நிதிக் கருவூலத்தை நீங்கள் மூடினாலும், தனது சாதுரியத்தினால் தமிழ்நாட்டு மக்களது தேவைகளை முடிந்த அளவுக்குப் பூர்த்தி செய்து வருகிறார் - தமிழ்நாட்டு முதலமைச்சர். எனவேதான், மக்களின் பேராதரவுடன் ஆட்சி புரிகிறார்!

இவரை பிரிவினைவாதி என்ற பூச்சாண்டி, வீண்பழி ஒருபோதும் அதிலும் குறிப்பாக இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அவர்களால் தொடர்ந்து சொல்லப்பட்டாலும், அது ஒருபோதும் எடுபடாது.

மக்களை ஜாதியால் பிரித்த பிரிவினைவாதிகள் யார்? :

‘பிரிவினைவாதிகளாக’ திராவிடர் இயக்கம் இருந்தால், சமூகநீதி, சகோதரத்துவ அடிப்படையில் திராவிட இந்தியாவாக ஆக்கிட, காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களை - கட்சிகளை இணைத்து ஏற்படுத்தப்பட்ட கூட்டணிக்கு ‘‘இந்தியா கூட்டணி’’ என்ற பெயர் சூட்டிட காரணமாக இருப்பார்களா?

“வர்ணபேதம் ஒழியவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுமா?” - தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி!

வர்ணாசிரம ஜாதியாலும், மதத்தாலும் மக்களை வேற்றுமைப்படுத்திடும் பேதத்தை நியாயப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் - பரிவாரத்தின் அரசியல் பிரிவான பா.ஜ.க. பிரதமர் மற்றவர்களை பிரிவினைவாதிகள் என்று கூறுவது அபத்தம்!

மனிதர்களை ஜாதியால் பிரித்தவர்கள் யார்? மனித உடல்களின் அங்கங்களைக்கூடப் பிரித்து ‘‘வலங்கை ஜாதி - இடங்கை ஜாதி’’ என்று பிரித்தது எது, உங்கள் ஆரியம் அல்லவா? திராவிடம் - சமத்துவம் அல்லவா! இப்படி எத்தனையோ கூற முடியும்!

வர்ணபேதம் ஒழியவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுமா? :

இந்தியா அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை போன்றவற்றை கொள்கை லட்சியங்களாகவே கொண்டு இயங்கும் இயக்கம் - திராவிட இயக்கங்களாகும். ஆர்.எஸ்.எஸ். ஜாதி வர்ணம் ஒழியவேண்டும் என்றாவது கூறுமா?

‘‘140 கோடி மக்களும் தன் குடும்பம் என்றால், இப்படி ஓட்டு வேட்டைக்கு ஓடோடி வருவதற்கு முன்னர், பேரிடரால் பாதிக்கப்பட்டபொழுது உதவிட வரவில்லையே அன்று!’’ முதலமைச்சர் ஸ்டாலின் குரல்தான் இனி தமிழ்நாட்டு ஒட்டுமொத்த குடும்பங்களின் ஒருங்கிணைந்த ஒரே குரல்! எங்கும் ஒலிக்கட்டும்!! மணிப்பூரை மறந்த பிரதமர், தமிழ்நாட்டைச் சுற்றி சுற்றி எத்தனை முறை வந்தாலும், பெரியார் மண் - சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில், ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. சரக்கு ஒருபோதும் விலை போகாது!

முதலமைச்சரின் முத்தான கருத்துகள் தெரு முழக்கமாக - பெருமுழக்கமாகட்டும்! :

காவியின் காலடியில் உள்ள ‘‘விபீடணக் கூட்டமும்‘’ விலாசம் இழக்கும் என்பதை தேர்தல் முடிவும் காட்டும்!

‘‘பலரை சில காலம் ஏமாற்றலாம் -

சிலரை பல காலம் ஏமாற்றலாம் -

ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது’’ என்ற பாடத்தை தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் இத்தேர்தலில் பா.ஜ.க.வுக்குக் கற்றுக் கொடுக்கும் என்பது உறுதி!

முதலமைச்சரின் முத்தான கருத்துகள் தெரு முழக்கமாக பெரு முழக்கமாகி எங்கும் ஒலித்தால், நியாயம் விளங்கும் - நீதி வெல்லும் என்பது உறுதி! வரும் தலைமுறையை வாழ வைக்க - வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ‘இந்தியா கூட்டணி’ வெற்றியடையவதன் மூலமே சாத்தியம்!

banner

Related Stories

Related Stories