மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்தது.இந்த வன்முறையில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு கடந்த ஆண்டு மே 3 மாதம், மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு பின்னர் அங்கு இணையம் மீண்டும் வழங்கப்பட்டபோது சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது.
அதன் பின்னரும் அங்கு பல்வேறு இடங்களில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த வன்முறை தொடங்கி ஒரு வருடம் முடியவுள்ள தற்போதும் அங்கு வன்முறை பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இது மாநில, ஒன்றிய பாஜக அரசுகளின் தோல்வியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த தற்காப்புக்கலை வீரர் சுங்ரெங் கோரன் , மோடி ஒரே ஒருமுறை மணிப்பூருக்குச் சென்று மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற Matrix Fight Night தொடரில் சுங்ரெங் கோரன் வெற்றிபெற்றார். அதன்பின்னர் பேசிய அவர், "மணிப்பூரில் வன்முறை தொடங்கி ஒரு வருடம் ஆகப்போகிறது. இன்னும் அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் இருக்கின்றனர்.
நிவாரண முகாம்களில் போதிய வசதிகள் இல்லாததால், உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எங்கள் மக்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. மோடிதயவு செய்து ஒரே ஒருமுறை மணிப்பூருக்குச் சென்று மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.