திராவிடர் கழகம் சார்பில் "தேர்தல் பத்திரமும், உச்சநீதிமன்ற தீர்ப்பும்" என்ற தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிரியர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்வில் தந்தை பெரியார் எழுதிய "நீதி கெட்டது யாரால்" என்ற புத்தகம் விரிவாக்கம் செய்யப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், "பாஜக ராஜதந்திர அரசியல் கட்சி. ஊழலை சட்டபூர்வமாக செய்வதில் கைதேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் அதிமுக, பாமகவை பாஜக பலவீனப்படுத்தி வருகிறது. தேர்தல் பத்திரம் மூலம் 58% நன்கொடையை பாஜக பெற்றுக்கொண்டது அம்பலமாகியுள்ளது. கருப்பு பணத்தை திரட்ட முடியும், ஆனால் கையாள முடியாது என்பதால் அதை வெள்ளை பணமாக மாற்ற பாஜக சிந்தித்து உருவாக்கிய திட்டம் தான் தேர்தல் பத்திர திட்டம்.
தேர்தல் ஆணையத்தை, தேர்தல் முறையை பயன்படுத்தி கும்பல் ஆட்சி(அம்பானி, அதானி, மோடி, அமித்ஷா அடங்கிய) இந்தியாவில் நடக்கிறது. ஜனநாயக நடைமுறை இல்லாமல் 1000, 500 ரூபாய் செல்லாது என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார் பிரதமர். ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச எத்திக்ஸ் இல்லாதவர்கள் பாஜகவினர்.
தேர்தல் முறையும், தேர்தல் ஆணையமும் தான் ஊழலை வித்திடுகிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் இந்திய தேர்தல் ஆணைய முறையை மாற்ற வேண்டும். இவிஎம் மிஷின் முலமாக ஆட்சியை திருடுகின்றனர். தமிழ்நாட்டிற்கு மோடி அடிக்கடி வருகிறார். திமுகவிற்கு எதிராக பேசுகிறார். பிஜேபி எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில்தான் அதிகம். பெரியார் விதைத்த சமூக நீதிதான் இதற்கு காரணம்.
முஸ்லீம், கிறிஸ்துவர்கள், தலித் மக்கள் கனிசமாக திமுகவிற்கு வாக்களிக்கின்றனர். 2024 தேர்தலில் வாக்கு வங்கியை சிதறடிப்பது தான் பாஜகவிற்கு இலக்கு. 2024 தேர்தல் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் மிக முக்கிய தேர்தல். இ வி எம் மிஷினுக்கு எதிராக வலுவான போராட்டத்தை எழுப்ப வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசமைப்பு சட்டத்தை தூக்கி எறிவார்கள். அம்பேத்கர் தந்தை பெரியார் பாடுபட்டு உருவாக்கிய சமூக நீதி அரசியலுக்கு சவக்குழி தோண்டி புதைத்து விடுவார்கள்.