நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன 31-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அடுத்த நாள் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். இடைக்கால பட்ஜெட்டில் வேண்டுமென்றே தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் உப்புசப்பில்லாத பட்ஜெட் இது என்றும் விமர்சனங்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து கேரளா, தமிழ்நாடு, கர்நாடக ஆகிய மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டங்களையும் மேற்கொண்டது. எனினும் நாடாளுமன்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் இதுகுறித்து பெரிதாக விவாதிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த சூழலில் இன்றுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், இறுதி நாளான இன்று, கட்டி முடிக்கப்பட்டுள்ள அயோத்தி இராமர் கோயில் குறித்து விவாதிக்க இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், தமிழ்நாட்டு மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், எனவே இந்த சம்பவம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்றும் மக்களவையில் திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.
ஆனால் இன்று இராமர் கோயில் விவகாரம் குறித்து மட்டுமே விவாதிக்க முடியும் என்று சபாநாயகர் கூறி மறுப்பு தெரிவித்ததால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழில் முழக்கமிட்டனர். தொடர்ந்து எழுந்த முழக்கத்தையடுத்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.