அரசியல்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திடீர் ராஜினாமா : புதிய முதல்வர் தேர்வு - மாநில அரசியலில் பரபரப்பு !

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவரை கைது செய்தனர் அமலாக்கத்துறையினர்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திடீர் ராஜினாமா : புதிய முதல்வர் தேர்வு - மாநில அரசியலில் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவைச் சேர்ந்த ஹேமந்த் சோரன் உள்ளார். இந்த சூழலில் இங்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜார்க்கண்ட் சுரங்கத் துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பெற்றதாகவும், நில மோசடி செய்ததாகவும் முன்னாள் முதல்வரும் பாஜகவை சேர்ந்தவருமான ரகுபர்தாஸ் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இதுதொடர்பாக அந்த கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக ஹேமந்திடம் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வந்தது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திடீர் ராஜினாமா : புதிய முதல்வர் தேர்வு - மாநில அரசியலில் பரபரப்பு !

அதன்படி இன்றும் நில மோசடி தொடர்பாக ஹேமந்த் சோரனிடம் சுமார் 7 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னால், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். மேலும் முதலமைச்சராக அம்மாநில போக்குவரத்துறை அமைச்சர் சம்பாய் சோரனை புதிய முதலமைச்சராக தேர்வு செய்து ஆளுநரிடம் பரிந்துரை செய்துள்ளார்.

ஹேமந்த் சோரன்,  சம்பாய் சோரன்
ஹேமந்த் சோரன், சம்பாய் சோரன்

ஹேமந்த் சோரனின் ராஜினாமா கடிதத்தையும் அம்மாநில ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு சம்பாய் சோரன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்டை தனி மாநிலமாக பிரிப்பதற்கான போராட்டத்தில் சம்பாய் சோரனின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதால், 'ஜார்க்கண்ட் புலி' என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories