மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே மாதம், பெருவாரியான ‘மெய்தெய்’ சமூகத்தினருக்கும், மலைவாழ் ‘குகி’ சமூகத்தினருக்கும், இடையே கலவரம் உருவான நிலையில், இன்று சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ST இடஒதுக்கீட்டில், பெரும்பான்மையான, ‘மெய்தெய்’ சமூகம் சேர்க்கப்பட வேண்டும் என்று, மணிப்பூர் நீதிமன்றம், மணிப்பூர் அரசுக்கு ஆணைப் பிறப்பித்த பின்னர், இக்கலவரம் வெடித்தது. இடஒதுக்கீட்டில் மெய்தெய் சமூக மக்கள் சேர்க்கப்பட்டால், குகி மற்றும் சூமி இன பழங்குடியினருக்கான, ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்ற நிலையை முன் வைத்துத் தொடங்கிய போராட்டம், சுமார் 200 மக்கள் அடிபட்டு இறப்பதற்கு காரணமாக இருந்தது.
குறிப்பாக, பழங்குடியினருக்கு எதிராக, பல பாலியல் துன்புறுத்தல்கள், சித்திரவதைகள் நடந்த காணொளிகள், சமூக வலைதளங்களில் பரவி, மணிப்பூர் கலவரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுக்க காரணமாக அமைந்தது. இருப்பினும், ஆளும் மாநில மற்றும் ஒன்றிய அரசான பாஜக, பெரும் நடவடிக்கைகள் எடுக்காத நிலையில், இன்றளவும் கலவரம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், மெய்தெய் சமூகத்தினரை ST இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்படுவதற்கு மாற்றாக, இதுவரை ST இடஒதுக்கீட்டில் பயன்பெற்று வந்த குகி மற்றும் சூமி பழங்குடியினரை, பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.
இந்த நடவடிக்கைக்கான முன்மொழிவை, மணிப்பூர் பாஜக அரசின் கூட்டணி கட்சியான, இந்திய குடியரசுக் கட்சியால் (அத்வாலே) முன்மொழியப்பட்ட நிலையில், அதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய பாஜக அரசு கூறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மக்கள், மணிப்பூர் மாநிலத்திற்கே உரியவர்கள் அல்ல என்றும், அவர்களுக்கு இடஒதுக்கீடு தேவையற்றது என்றும் பாஜக கூட்டணிக் கட்சியான இந்திய குடியரசுக் கட்சி கூறியுள்ளது.
இதனையடுத்து, ஆட்சி அதிகாரம், அடிப்படை அதிகாரம் என எவையும் இல்லாத, சிறுபான்மை பழங்குடி சமூகத்திற்கு, உறுதுணையாக செயல்படாமல், அவர்களை நிலத்திற்கே உரியவர்கள் இல்லை எனக் கூறும் பாஜகவின் செயல், கடும் கண்டனத்திற்கு உரியது என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும், எதிர்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.